முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு அதிகாலையில் திரண்ட பக்தர்கள்

செவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2018      தேனி
Image Unavailable

 போடி, தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
     போடியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட, பிரசித்திபெற்ற சீனிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பூஜை அதிகாலை நடைபெற்றது.  இதற்காக கோவில் வளாகத்தில் பூக்கள் அலங்காரத்தால் சொர்க்கவாசல் அமைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு முதலே கோவிலில் உள்ள சொர்க்கவாசல் மண்டபத்தில் ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு சீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி அருள்பாலித்தார்.
     அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் பெருமாளை வழிபட்டனர். தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று சொர்க்கவாசலில் எழுந்தருளிய ஸ்ரீநிவாச பெருமாளுக்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியின்போது திருப்பாவைக் குழுவினர் பக்திப் பாடல்களைப் பாடினர்.
     மேலும் மூலவருக்கும்  அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன், கோவில் அர்ச்சகர் சீனிவாச வரதன் என்ற கார்த்திக் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். 
     இதேபோல் போடி வினோபாஜி காலனியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயணன் சன்னதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. இதில் சங்கரநாராயண பெருமாளுக்கு தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. காலையில் நூற்றுக்கணக்கான பெண்கள் உள்பட பக்தர்கள் சங்கரநாராயணனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் தலைவர் முத்தையா, அர்ச்சகர் சேகர் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.
     இதேபோல் போடி ஜக்கமநாயக்கன்பட்டி தொட்டராய பெருமாள் கோவில், மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயப் பெருமாள் கோவில், சிலமலை பெருமாள் கோவில், தேவாரம் ரெங்கநாத பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து