முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.டி.எம்.களில் வைப்பதற்காக கொண்டு சென்ற பணத்தினை கூட்டுகொள்ளையடித்த 6 பேர் சிக்கினர்

வெள்ளிக்கிழமை, 21 டிசம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ஏ.டி.எம்.களில் வைப்பதற்காக கொண்டு சென்ற பணத்தினை ஊழியர்களே வாகனத்தினை கவிழ செய்து நாடமாடி கூட்டு கொள்ளையடித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசாரின் விசாரணையில் 6 பேர் சிக்கி உள்ளனர்.
     ராமநாதபுரம் மாவட்டம் சயால்குடி அருகே கூராங்கோட்டை விலக்குரோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் சென்ற 4 பேர் காயமடைந்ததாகவும், அதில் இருந்த ரூ.1 கோடியே 67 லட்சம் பணம் மாயமானதாகவும் தகவல் பரவியது. இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஒம்பிரகாஷ்மீனா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். விசாரணையின்போது வாகனத்தில் வந்த பணம் பாதுகாக்கும் பொறுப்பாளர்கள் திருவாடானை அருள் மகன் அன்பு(வயது28), இளையான்குடி கீழாய்குடி நாகநாதன் மகன் குருபாண்டியன்(22), டிரைவர் சத்திரக்குடி முதலூர் மோகன் மகன் கபிலன்(23), திருப்பாலைக்குடி குண்டத்தூர் பொன்ராஜ் மகன் பாதுகாவலர் வீரபாண்டியன்(54) ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. முன்னுக்குபின் முரணாக பேசிய நபர்களை தனித்தனியாக அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் மேற்கண்ட 4 பேரும் கூட்டாக சேர்ந்து பணத்தினை கூட்டுகொள்ளை அடித்தது தெரிந்தது. மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் 4 பேர் ராமநாதபுரத்தில் இருந்து பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எச்.டி.எப்.சி வங்கிகளில் இருந்து அதனதன் ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக வாங்கிவரபட்ட ரூ.2 கோடியே 11 லட்சம் பணத்தினை வாங்கி வந்து அதனை திட்டமிட்டு கொள்ளையடித்துள்ளனர்.
    ஏ.டி.எம்.களில் ரூ.22 லட்சம் வரை நிரப்பியதோடு மீதம் உள்ள பணத்தினை கொள்ளையடித்திருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் அளித்த தகவலின் பேரில் மேற்கண்ட கபிலனின் உறவினரான பரமக்குடி முதலூர் முனியசாமி மகன் கந்தபாண்டி(28) மற்றும், அவரின் நண்பரான ராமநாதபுரம் நேருநகர் முத்துமுருகேசன் மகன் யோகேஷ்(28) ஆகியோரை போலீசார் பிடித்து வந்தனர். இவர்களிடம் இருந்து ரூ.32 லட்சத்து 71 ஆயிரம் பணத்தினை போலீசார் கைப்பற்றினர். வங்கிகளில் இருந்து வாங்கி வரப்பட்ட ரூ.2 கோடியே 11 லட்சத்தில் கைப்பற்றப்பட்டது போக மீதம் உள்ள பணம் என்ன ஆனது. எங்கு யாரிடம் உள்ளது என்பது போன்ற விபரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் பிடிபட்டுள்ள 6 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏ.டி.எம்.களில் வைக்க கொண்டு செல்லப்பட்ட பணத்தினை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்களே திட்டமிட்டு நாடகமாடி கொள்ளையடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து