முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலங்கினங்களை பாதுகாப்பதற்கான உரிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு:

வெள்ளிக்கிழமை, 21 டிசம்பர் 2018      சிவகங்கை
Image Unavailable

 காரைக்குடி.-காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக விலங்குகள் நலன் மற்றும் மேலாண்மை துறையின் சார்பில் “நம் நாட்டு மாடுகளின் மேலாண்மை மற்றும் அவற்றின் மதிப்பு சேர்க்கப்பட்ட தயாரிப்புகளின் பொருளாதார நிலை” என்ற தலைப்பிலான இரண்டு நாள் கருத்துப்பட்டறையின் தொடக்க விழா பல்கலைக்கழக அறிவியல் வளாக கருத்தரங்க அறையில் நடைபெற்றது.  இக்கருத்துப்பட்டறை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ரூசா இரண்டாம் கட்ட நிதிஉதவியின் மூலம் நடத்தப்பட்டது..
  அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.நா.இராஜேந்திரன் இக்கருத்துப்பட்டறையை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார்.  அவர் தனது உரையில், மிகச்சிறந்த கல்வி நிறுவனங்கள், மிக உயர்ந்த அறிஞர்களால் உருவாக்கப்படுகிறது என்றும், ஒரு கல்வி நிறுவனம் சிறப்பு பெறுவதற்கு அங்கு வழங்கப்படும் சிறந்த கல்வியும், கற்பித்தல் மேம்பாடும், உயர் ஆராய்ச்சியுமே காரணமாக அமைகிறது என்றார். அழகப்பா பல்கலைக்கழகம் தேசிய அளவில் பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ள நிலையில் 2019ஆம் ஆண்டில் தகைசால் நிலை பல்கலைக்கழகமாக மாறுவதற்கு அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஆராய்ச்சியை மேம்படுத்தி ஹெச் இன்டக்சை உயர்த்துவதற்கு ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.  மேலும் அவர் பேசுகையில் பசு மாடுகளை பராமரிப்பது என்பது நமது இந்திய கலாச்சாராத்தில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்பட்டுவருகிறது.  பழங்காலந்தொட்டே நமது முன்னோர்கள் பசுக்களை தெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர்.  பசுவின் மூலம் கிடைக்கப்பெறும் அனைத்துப் பொருள்களும் மனித சமுதாயத்திற்கு பயன் உள்ளதாக உள்ளது. எனவே  விலங்கினங்களை பாதுகாப்பதற்கான உரிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எந்தவொரு ஆராய்ச்சியாக இருந்தாலும் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பயன் தரும் வகையில் அமைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
  இந்தப் பயிற்சி பட்டறையின் தொடக்க விழாவில் சிறப்புரை ஆற்றிய திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. பி.மணிசங்கர் நம் நாட்டு மாடுகள்; மூலம் கிடைக்கும் மதிப்புக் கூட்டப்பெற்ற பொருள்கள் குறித்தும் அவற்றில் சில தயாரிப்புகள்; மூலம்  நோய்களை குணப்படுத்தக்கூடிய சாத்தியக் கூறுகளைப் பற்றியும் விளக்கி பேசினார். பசு மாட்டின் மூலம் எண்ணிலடங்கா பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. நம் நாட்டில் 27வகையான நாட்டு மாடுகள் உள்ளன என்றும் அவைகள் அழிந்து விடாமல் பாதுகாப்பது நமது கடமையாகும் என்றும் குறிப்பிட்டார். தற்போது உள்ள சந்ததியினர் நமது முன்னோர்களைப் போல பசுக்களின் முக்கியத்துவத்தையும் அவற்றை பேணிக் காப்பதின் அவசியத்தையும் உணராமல் இருந்து வருகின்றனர்.  பால் பொருட்களின் தேவை அதிகமாக உள்ளதால் கலப்படங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவற்றைத் தடுக்க பசுக்களின் பராமரிப்பு மற்றும் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்குவது இன்றைய காலகட்டத்தில் கட்டாயமான ஒன்றாகும். சமூகம் மேம்பாடு அடைவதற்கு உதவிபுரியும் வகையில் நம் ஆராய்ச்சிகளும் ஆலோசனைகளும் அமைய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
  பேராசிரியர் கே.பி.ரமேஷா, முதன்மை விஞ்ஞானி, தேசிய பால் உற்பத்தி ஆராய்ச்சி நிறுவனம், தென் மண்டலம், பெங்களுர், முனைவர் ஜான் ஆபிரகம், கேரள கால்நடைப் பல்கலைக்கழகம் ஆகியோர் தங்களது உரையில், நம் நாட்டு மாடுகள் மூலம் கிடைக்கும் மதிப்பு மிக்க பொருட்கள் பற்றியும், விலங்குகளின் பாரம்பரிய முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தனர்.
  இந்நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலைக்கழக அறிவியல் புலத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பிற கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 விலங்குகள் நலன் மற்றும் மேலாண்மைத்துறைத்தலைவர் பேரா.பா.வசீகரன் வரவேற்புரை ஆற்றினார்.  பயிற்சிப்பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.வி.நித்யா நன்றியுரை கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து