முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலி ஜெண்டில்மேன் ரவிசாஸ்திரி புகழாராம்

ஞாயிற்றுக்கிழமை, 23 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : இந்திய அணி சிறப்பாகத்தான் செயல்படுகிறது, குறை சொல்பவர்கள் லட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு எளிதாகக் குறை சொல்கிறார்கள் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார்.

பெர்த் டெஸ்டில் இந்திய அணி மோசமான செயல்பாட்டால் தோல்வி அடைந்ததற்கு சுனில் கவாஸ்கர், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்தனர். அதற்குப் பதிலடி தரும் வகையில் யார் பெயரையும் குறிப்பிடாமல் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.

மெல்போர்ன் நகரில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சமீபத்தில் முன்னாள் வீரர்கள் அணியின் தேர்வு, விளையாடும் 11 வீரர்களைத் தேர்வு செய்ததை விமர்சித்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

நான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. பல லட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு குறை சொல்வதும், விமர்சித்துப் பேசுவதும் எளிது. அவர்களின் விமர்சனங்கள் மிகத் தொலைவில் இருக்கிறது. எங்களைப் பொருத்தவரை நாங்கள் சிறப்பாகச் செயல்படுகிறோம், அணிக்கு எது சிறந்ததோ அதை நேர்த்தியாகச் செய்கிறோம்.

விளையாடும் 11 பேரில் ரவிந்திர ஜடேஜாவை சேர்ப்பதா இல்லையா என்ற குழப்பம் இருந்தது, சிலர் பல்வேறு கருத்துக்களையும் கூறினார்கள். ஆனால் ஜடேஜா விவகாரம் தவிர்த்து வீரர்களை தொடருக்கு தேர்வு செய்தது என்பது என் கையில் இல்லை. என்னைச் சார்ந்த விஷயமும் இல்லை.

இசாந்த் சர்மாவுக்கும், ஜடேஜாவுக்கும் களத்தில் நடந்த வாக்குவாதம் குறித்து நான் வியப்படையவில்லை. அந்த காட்சியை ரசித்தேன். இதுபோன்ற சந்தர்ப்பங்கள் வீரர்களை நெருக்கமாக இருக்கச் செய்யும். விராட் கோலியின் நடவடிக்கை, செயல்பாடு குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் கேள்வி எழுப்புகின்றன. விராட் கோலி சிறந்த வீரர். அவரின் நடத்தையில் என்ன தவறு இருக்கிறது. விராட் கோலி உண்மையான ஜென்டில்மேன்.மயங்க் அகர்வால் இளம் வீரர். துடிப்புடன் விளையாடக் கூடியவர். அவருக்கு உரிய வாய்ப்பு வரும்போது அழைக்கப்படுவார். எங்களைப் பொருத்தவரை இன்னும் தொடரை இழக்கவில்லை. நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து