முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டிப்பட்டி தொகுதியில் அ.தி.மு.க 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் துணை முதல்&அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 23 டிசம்பர் 2018      தேனி
Image Unavailable

ஆண்டிப்பட்டி,- தமிழகத்தில் நடைபெற உள்ள 20 தொகுதிகள் இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று துணை முதல்&அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
 முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் அவர் நின்று வெற்றி பெற்ற திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க எம்.எல்.ஏ போஸ் போட்டியிட்ட திருப்பரங்குன்றம் தொகுதியு-ம், அ.தி.மு.கவில் பிரிந்து அ.ம.மு.கவில் செயல்பட்டு வந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தொகுதியும் சேர்த்து மொத்தம் 20 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிகளில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தற்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். அதில் ஒருபகுதியாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் குறித்த அ.தி.மு.க செயல்வீரர்கள் மற்றும் ஆலோசனை கூட்டம் ஆண்டிப்பட்டி நகரில் நேற்று நடைபெற்றது. ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகம் அருகே திறந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் ஏ.லோகிராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள தமிழக துணை முதல்&அமைச்சரும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். அ.தி.மு.க மாவட்ட செயலாளர் சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், அ.தி.மு.க மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர், கடமலை&மயிலை ஒன்றிய செயலாளர் ஏ.கொத்தாளமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழக துணை முதல்&அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது,
கடந்த 2004ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது ஏற்பட்ட சுனாமி பேரலையில் விரைவாக மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையில் வெற்றி கண்டோம். அவரைபோல அடுத்த வந்த தானே, வர்தா, ஒகி சமீபத்தில் வந்த கஜா புயல்களில் நாங்கள் எடுத்த துரிதநடவடிக்கையால் வெற்றி பெற்றோம்.
கடந்த 2001&ம் ஆண்டு ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் நின்று வெற்றி வெற்றி பெற்று முதல்வரான ஜெயலலிதா, ஆண்டிப்பட்டியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்க விரும்பினார். அதற்காக நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கையில், ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் லோகிராஜன் குடும்பத்திற்கு சொந்தமான பலகோடி மதிப்பிலான சுமார் 25 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி தற்போது மருத்துவக்கல்லூரி சிறப்பாக செயல்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த தொகுதியில் வெற்றி பெற்று தங்கதமிழ்செல்வன் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் ஆண்டிப்பட்டி தொகுதியில் எந்த வளர்ச்சிப்பணியும் செய்யவில்லை என கூறி இங்கு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். ஆனால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு மட்டும் சுமார் 1,088 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் தேர்தலிலும் மகத்தான வெற்றி பெறுவதற்காக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர் ஆகியோர்களை தொகுதி பொறுப்பாளர்களாக நியமனம் செய்துள்ளோம். 20 தொகுதி இடைத்தேர்தல்களில்  ஆண்டிப்பட்டி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் யாரை நிறுத்தினாலும், நாங்கள் 1 லட்சம் வாக்குககள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். ஆண்டிப்பட்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏன் வந்தது? இந்த ஆட்சியை கலைத்தே தீரவேண்டும் என்று டி.டி.வி.தினகரன் 18 எம்-.எல்.ஏக்களை சேர்த்துக் கொண்டு கங்கணம் கட்டி திரிந்தனர். ஆட்சி இருக்கும் வரையில் தான் அ.தி.மு.க இருக்கும் என்றும் கூறினார். அ.தி.மு-.கவை பற்றி பேச அவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. அவரது கட்சிக்கு ஜெயலலிதா பெயரை வைக்க என்ன தகுதி இருக்கிறது? 2007&ம் ஆண்டு டி.டி.வி.தினகரனை, ஜெயலலிதா அ.தி.மு.கவில் இருந்து ஒதுக்கி வைத்திருந்தார். பெரியகுளம்  தொகுதிக்குள் வரக்கூடாது என்றும், எம்.பி பதவியுடன் பாராளுமன்றத்திற்குள் நுழையக்கூடாது என்றும் உத்தரவிட்டார். ஜெயலலிதா இறக்கும் வரையில் அவரிடம் டி.டி.வி.தினகரன் எந்த மன்னிப்புக்கடிதமும் கொடுக்கவில்லை. அவரை சந்திக்கவும் இல்லை. ஜெயலலிதா உடலநலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்ற போதும், டி.டி.வி.தினகரன் பாண்டிச்சேரியில் தங்கியிருந்தார். நாங்கள் தாடியுடன் கோவில் கோவிலாக பிரார்த்தனை செய்து வந்தோம். டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து ஏன் நீக்கினார் என்பது குறித்து ஜெயலலிதாவிற்கும், எனக்கும் தான் தெரியும். ரத்தம் சிந்தி பலர் உயிர் தியாகம் செய்து வளர்ந்த இயக்கம் அ.தி.மு.க. டி.டி.வி.தினகரனை பற்றி நான் கூறியது மிகவும் குறைவுதான். அவரைப்பற்றி இன்னும் பேசவேண்டும். ஆயிரம் தினகரன் வந்தாலும் அசைத்துக்கூட பார்க்க முடியாத எக்கு கோட்டையாக அ.தி.மு.க உள்ளது.
டி.டி.வி.தினகரனை நம்பி சென்றவர்கள் தற்போது செல்லாக்காசாக உள்ளனர். அ.தி.மு.கவை எதிர்த்து யார் சென்றாலும் அவர்களுக்கும் இந்த நிலைதான் ஏற்படும். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் 4 பேர் மீண்டும் அ.தி.-மு-.கவில் இணைய என்னிடம் தூதுவிட்டுள்ளனர். டி.டி.வி.தினகரனிடம் முழுமையாக ராஜினாமா செய்துவிட்டு வாருங்கள் என்று கூறிவிட்டேன். முன்னதாக தி.மு.கவில் இணைந்த செந்தில்பாலாஜியும் அ.தி.மு.கவில் இணைய தூதுவிட்டனர். செந்தில் பாலாஜி ஒரு ராஜதுரோகி. அவர் இதுவரை எந்த கட்சியிலும் நிலைத்து நின்றதில்லை. அவர் செல்லும் கட்சி விளங்காது. 20 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும் வகையில் அ.தி.மு.க தொண்டர்கள் இப்போதே தேர்தல் பணிகளை செய்ய வேண்டும்.
இந்த கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் டி.ஆர்.என் வரதராஜன், ஆண்டிப்பட்டி முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் ரமாதேவி ராஜாங்கம், ஆவின் இயக்குனர்கள் சரவணன், சாமிதாஸ், மாவட்ட பிரதிநிதி கவிராஜன் ஆகியோர் உள்பட ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள 5 ஆயிரத்திற்கும் அதிகமான அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து