முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூடானில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: 19 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 28 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

கர்த்தூம், சூடான் நாட்டில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைகளில் இதுவரை 19 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரொட்டி விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்க போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறைப் போராட்டங்கள் மற்றும் போலீஸ் நடவடிக்கைகளில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 2 பேர் பாதுகாப்பு படையினர் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இதற்கிடையே போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பத்திரிகையாளர் சங்கமும்  ஸ்டிரைக்கில் குதித்துள்ளது. தலைநகர் கர்த்தூம் உள்ளிட்ட சில பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 29-ம் தேதி வரை ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். போராட்டம் நடத்திய பத்திரிகையாளர்களில் சிலரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.

அதிபர் ஒமர் அல் பஷீர் தலைமையிலான அரசாங்கத்தை தூக்கி எறியும் வரை போராட்டத்தை தொடர வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழல் உருவாகியிருப்பதால் அனைத்து பகுதிகளிலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, போராட்டக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறை மற்றும் வன்முறைகளால் கடும் அதிருப்தி அடைந்த வடக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். இது ஆளும் கூட்டணிக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து