முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் நேரில் ஆய்வு

புதன்கிழமை, 2 ஜனவரி 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கைகளை கலெக்டர் வீரராகவராவ் நேரில் ஆய்வு செய்தார்.
 தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளபடி, 01.01.2019 முதல் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட சாலைத் தெரு, வண்டிக்காரத் தெரு, மீன்மார்க்கெட், ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் சுற்றுப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், அடுமனைகள் (பேக்கரிகள்), பழக்கடைகள், உணவகங்கள் ஆகியவற்றில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கடைகளில் பயன்பாட்டில் இருந்த தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ள 14 விதமான ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  அதே போல, சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடத்தில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தினை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இதன்பின்னர்அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, 01.01.2019 முதல்; ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பதற்காக நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம் வாரியாக மொத்தம் 37 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  இக்குழு அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 அந்த வகையில், ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு செய்யப்பட்டது.  இந்த ஆய்வின் அடிப்படையில், கடைகளில் பயன்பாட்டில் இருந்த பிளாஸ்டிக் தாள், தெர்மகோல் தட்டுகள், தெர்மகோல் குவளைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள்,  அனைத்து விதமான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தேநீர் கப்புகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித  குவளைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித பைகள், பிளாஸ்டிக் கொடிகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் ஆகியவை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் உடனடியாக பறிமுதல் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 அதே வேளையில், வியாபாரிகளிடத்திலும், கடைகளுக்கு வரும் பெரும்பான்மையான பொதுமக்களிடத்திலும் தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு தடை குறித்த விழிப்புணர்வு உள்ளது.  கடைகளுக்கு காய்கறி, மளிகை சாமான்கள் வாங்க வரும் பெரும்பான்மையான மக்கள் சொந்தமாக துணிப்பை கொண்டு வருவதை காண முடிகிறது.  அதே போல மீன் கடைகள், இறைச்சி கடைகள் ஆகியவற்றில் பொதுமக்களுக்கு இறைச்சியினை பேப்பர்களில் பொட்டலமாக வழங்குகின்றனர்.  இது ஆரோக்கியமான மாற்றமாகும்.  இருப்பினும், இறைச்சி, மீன் ஆகியவற்றை விற்பனை செய்யும் போது வாழை இலை பயன்படுத்திடவும், சொந்தமாக பாத்திரம் கொண்டு வரவும் போன்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கடைகளில் வைத்திடவும் சம்பந்தப்பட்ட கடைக்காரர்களிடத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலனுக்காக அறிவித்துள்ள பிளாஸ்டிக் ஒழிப்பு உத்தரவினை முழுமையாக செயல்படுத்துவதில் எவ்வித பாரபட்சமுமின்றி பணியாற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  சிறு கடை முதல் வணிக வளாகங்கள், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்  உற்பத்தி நிறுவனங்கள் என அனைத்து தரப்பிலும் தொடர்ந்து ஆய்வு செய்திட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். இந்த ஆய்வின் போது, ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் சாத்தையா, முதுநிலை வருவாய் ஆய்வாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் அடங்கிய பிளாஸ்டிக் ஒழிப்பு குழு அலுவலர்கள், ராமநாதபுரம் வட்டாட்சியர் கார்த்திகேயன், ராமநாதபுரம் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து