முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிஷப் அடிச்சது ஒரு சதம்... முறியடிச்சது 11 சாதனைகள்

சனிக்கிழமை, 5 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னியில் நடைப்பெற்று வரும் கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப்  அடித்ததோ ஒரு சதம் ஆனால் அவரால் முறியடிக்கப்பட்ட சாதனைகள் 11. என்ன நம்ப முடிகிறதா? அவர் படைத்த சாதனைகளை பார்ப்போம்.

1) ஒரே டெஸ்ட் தொடரில் 200 ரன்களுக்கும் மேல் அடித்து, 20 பேட்ஸ்மேன்களை வெளியேற்றிய ஆசிய கண்டத்தைச் சேர்ந்த முதல் விக்கெட் கீப்பர்  இவர்தான்.
2) ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்தான். 1967-ல் அடிலெய்டில் நடந்த போட்டியில் இந்தியாவின் ஃபரோக் என்ஜினியர் 89 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
3) வெளிநாட்டு மண்ணில் 150 ரன்களுக்கு மேல் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். முன்னதாக, பாகிஸ்தானில் நடந்த டெஸ்டில் முன்னாள் கேப்டன் தோனி 148 ரன்களே அடித்திருந்தார்.
4) இரண்டு வெளிநாடுகளில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். அவர், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் சதம் அடித்துள்ளார். சர்வதேச அளவில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜெஃப் டுஜோன் இரு வெளிநாடுகளில் சதம் அடித்துள்ளார்.
5) சர்வதேச டெஸ்ட் அரங்கில் 150 ரன்களை கடந்த முதல் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். 21 வயது 91 நாட்களில் அவர் இந்த ரன்களை எடுத்துள்ளார். முன்னதாக, ஜிம்பாப்வேயின் தைபு 21 வயது 245 நாட்களில் 153 ரன்களை எடுத்திருந்தார்.
6) சர்வதேச டெஸ்ட் அரங்கில், இளம் வயதில் 100 ரன்களுக்கு மேல் அடித்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்.
7) ஆஸ்திரேலிய மண்ணில் 7-வது விக்கெட்டுக்கு 150 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை ரிஷப் பண்ட் - ஜடேஜா படைத்துள்ளனர்.
8) ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் எடுத்ததன்மூலம், வெளிநாட்டில் அதிக ரன்கள் அடித்து சாதனை செய்த ஆசிய கண்டத்தைச் சேர்ந்த வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் உடன் இணைந்தார்.
9) ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் 350 ரன்கள் எடுத்து தோனியைப் பின்னுக்கு தள்ளினார். 2014-ல் நடந்த டெஸ்ட் தொடரில் தோனி 349 ரன்களே எடுத்திருந்தார்.
10) நடப்பு தொடரில் புஜாராவுக்கு அடுத்தபடியாக அதிக ரன்கள் அடித்தவர்கள் வரிசையில் 2-வது இடத்தில் ரிஷப் பண்ட் இருக்கிறார். கேப்டன் கோலியை விட அதிக ரன்கள் அடித்துள்ளார்.
11) ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்த ஆசிய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றார். ஆஸ்திரேலியாவில் அதிக ரன்கள் அடித்த 2-வது வெளிநாட்டு விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் செய்தார். 2012-ல் டி வில்லியர்ஸ் 169 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து