முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்சில் மீண்டும் வலுப்பெற்றது மஞ்சள் அங்கி போராட்டம் - பல இடங்களில் வன்முறை

திங்கட்கிழமை, 7 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

பாரீஸ் : பிரான்சில் மஞ்சள் அங்கி போராட்டம் மீண்டும் வலுப்பெற்றது. இதனால் பல இடங்களில் வன்முறை வெடித்தது. 

பிரான்ஸ் நாட்டில், சுற்றுச்சூழலை காரணம் காட்டி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை அரசு உயர்த்தியது. இதனை எதிர்த்து கார் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களுடன் பொது மக்களும் கைகோர்த்ததால் இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை கண்டித்து தொடங்கிய போராட்டம், அரசின் பல்வேறு கொள்கைகளுக்கு எதிராக திரும்பியதால் பெருந்திரளான மக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.கார் டிரைவர்கள் அணியும் மஞ்சள் நிற அங்கிகளை அணிந்து கொண்டு மக்கள் போராட்டம் நடத்தியதால் இது மஞ்சள் புரட்சி என்றும், மஞ்சள் அங்கி போராட்டம் என்றும் அழைக்கப்பட்டது.ஒவ்வொரு வாரத்தின் இறுதிநாட்களிலும் நடந்த இந்த போராட்டம் தலைநகர் பாரீசை ஸ்தம்பிக்க வைத்தது. அதே சமயம் இந்த போராட்டத்தில் பல முறை வன்முறையும் வெடித்தது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

மக்களின் இந்த ஓயாத போராட்டம் அதிபர் மெக்ரானின் அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. இதையடுத்து போராட்டத்துக்கு அரசு பணிந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து 5 வாரங்களாக நடந்து வந்த மஞ்சள் அங்கி போராட்டத்தின் தீவிரம் சற்று குறைந்தது. எனினும் அதிபர் மெக்ரான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் தொடர்ந்தது.பாரீஸ் உள்பட பிற நகரங்களில் நடந்த போராட்டங்களில் குறைந்த அளவிலான மக்கள் மட்டும் பங்கேற்றனர். அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றதால் வன்முறை சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை.

இந்த நிலையில் 8-வது வாரமாக நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் மஞ்சள் அங்கி போராட்டம் மீண்டும் வலுப்பெற்றது. மேலும் இந்த போராட்டத்தின் போது பல இடங்களில் வன்முறையும் வெடித்தது.பாரீசில் செயின்ட் ஜெர்மைன் என்கிற இடத்தில் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் தங்கள் கண்ணில் பட்ட பொருட்களுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது.

அதேபோல், செயின் ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் குவிந்த போராட்டக்காரர்கள் படகுகளுக்கும், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களுக்கும் தீ வைத்தனர். இதையடுத்து வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, அவர்களை விரட்டி அடித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து