பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14, 263 சிறப்பு பஸ்களுக்கான 30 முன்பதிவு மையங்கள் தொடக்கம் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 9 ஜனவரி 2019      தமிழகம்
MR vijayabaskar start specias bus reserve 2019 01 09

சென்னை : பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்பட இருக்கும் 14, 263 சிறப்பு பஸ்களுக்கான 30 முன்பதிவு மையங்களை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேட்டில் சிறப்பு பஸ்களுக்கு 30 முன்பதிவு மையங்களை போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் , நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

இன்று முதல்...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகளை இயக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த அடிப்படையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 முன்பதிவு மையங்களை திறந்து வைத்துள்ளோம். அதே போல தாம்பரத்தில் 2 மாதவரம் பேருந்து நிலையத்தில் ஒன்று, பூந்தமல்லியில் ஒன்று என்று மொத்தம் 30 முன்பதிவு மையங்கள் இன்று முதல் செயல்பட துவங்கும்.

சிறப்பு பேருந்துகள்...

11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 14-ம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் பயணிகள் அதிகமாக வருவார்கள் என்ற காரணத்தால் அதிக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த ஆண்டு தினசரி இயக்கக் கூடிய 2725 பேருந்துகளை தவிர சிறப்பு பேருந்துகளாக 5163 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மொத்தம் 14,263 பேருந்துகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து மட்டும் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகிறது. மற்ற ஊர்களுக்கு 10,445 பேருந்துகள் இயக்கப்படுகிறது. மொத்தம் 24,708 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பயணிகள் பாதுகாப்பாக சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அரசு பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்கிக் கொண்டிருக்கிறது.

திண்டிவனம் வழியாக....

ஆந்திரா மார்க்கமாக செல்லக் கூடிய பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளது. அது போல ஈ.சி.ஆர். சாலை மார்க்கமாக பாண்டிச்சேரி, கடலூர் செல்லக் கூடிய பேருந்துகள் கே.கே.நகர் பணிமனையிலிருந்தும் இயக்கப்படும். விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லக் கூடிய பேருந்துகள் தாம்பரம் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, திருச்சி செல்லக் கூடிய பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து...

வேலூர், ஆற்காடு, ஒசூர் , காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி வழியாக செல்லக் கூடிய பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளது. மற்ற ஊர்களுக்கு திண்டிவனம், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். திருவண்ணாமலை, ஆரணிக்கு கோயம்பேட்டிலிருந்தும், தாம்பரம் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்படும்.

நெரிசல் குறையும்...

சென்ற தீபாவளியின் போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இயக்கப்பட்ட பேருந்துகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே பொங்கல் பண்டிகைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்து நெரிசலை குறைப்பதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திருந்து செல்லக் கூடிய பேருந்துகள் பெருங்குளத்தூர் செல்லாமல் மதுரவாயல் வெளிசுற்று சாலையில் வண்டலூர் பகுதியில் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பெருங்குளத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும். அதுபோல ஊரப்பாக்கம் பகுதியில் சிறப்பு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக பேருந்து நின்று செல்லும் காரணத்தால் முன்பதிவு செய்தவர்கள் அங்கிருந்தும் பயணம் மேற்கொள்ளலாம். இதனால் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும்.

ஒத்துழைப்பு தர...

கார்களில் செல்பவர்கள் தாம்பரம், பெருங்குளத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருக்கழுங்குன்றம் அல்லது ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு வழியாக சென்றால் போக்குவரத்து நெரிசல் இருக்காது என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்களின் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். பொங்கல் பண்டிகை முடித்து பொதுமக்கள் சென்னைக்கும் மற்ற ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்திருக்கிறோம். சென்ற ஆண்டு 20,185 பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த ஆண்டு 24,708 பேருந்துகள் இயக்க அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து