தேவைகளுக்காக மனிதர்களை கடத்தும் செயல் அதிகரிப்பு - அறிக்கையில் ஐ.நா. வேதனை

ஐ.நா : தேவைகளுக்காக மனிதர்களைக் கடத்தும் செயல் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் சபையின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான 2018-ம் ஆண்டிற்கான அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. அதில், மனிதக் கடத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஆயுதம் ஏந்திய போராட்டக்காரர்கள் மற்றும் தீவிரவாதிகள் அவர்களது பொருளாதாரத் தேவைகளுக்காக பெண்களையும், குழந்தைகளையும் கடத்துகின்றனர். மேலும் உடல் உறுப்புகளைத் திருடுவதற்காக கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடத்தப்படுபவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள். கடத்தப்பட்டவர்கள் பின் பாலியல் துன்புறுத்தல், வேலை, பிச்சை எடுப்பதற்காக வற்புறுத்தப்படுகின்றன.
கடத்தல் சம்பவங்களுக்கு எதிராக போதிய நடவடிக்கைகள் எடுக்காத நாடுகளில் தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. கடந்த 7 ஆண்டுகளில் கடத்தல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தும் 2016-ம் ஆண்டில் கடத்த 13 வருடங்களில் இல்லாத அளவுக்கு கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.