பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.க: தமிழகத்தில் கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கின்றன - பிரதமர் மோடியின் அழைப்பால் பரபரப்பான அரசியல் களம்

புது டில்லி : தமிழகத்தில் கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளது, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் வாழ்த்து
தர்மபுரி, கடலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, அரக்கோணம் தொகுதி பா.ஜ.க. நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் முறையில் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது தமிழக மக்களுக்கு அவர் தனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும், தமிழகத்தில் யாருடன், பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர், தமிழகத்தில் கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கின்றன. பழைய நண்பர்களுக்கும், கட்சிகளுக்கும் பா.ஜ.க.வின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். கூட்டணி விவகாரத்தில் வாஜ்பாயின் வழியிலேயே பா.ஜ.க. செயல்படும்.
தயாராக உள்ளது...
அரசியல் பிரச்சினைகள் எத்தனை இருந்தாலும் வெற்றி பெறுவது மக்களுடனான கூட்டணியே. 20 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் நாட்டில் புதிய கூட்டணி கலாசாரத்தை ஏற்படுத்தினார். மத்திய, மாநில கட்சிகள் இணைந்து மக்கள் நலனுக்காக திறம்பட செயலாற்ற முடியும் என்பதை அவர் நிரூபித்தார். மத்தியில் பா.ஜ.க. பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும், கூட்டணியுடனே பா.ஜ.க. ஆட்சி அமையும். நம்பிக்கையின் அடிப்படையிலேயே கூட்டணி அமையும். கட்டாயத்தின் அடிப்படையில் இல்லை. பழைய நண்பர்களை வரவேற்க பா.ஜ.க. தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
புரோக்கர்களின்....
மேலும் பொருளாதார நிர்வாகத் திறன் இல்லாமை, ஊழல்தான் காங்கிரசின் மிகப் பெரிய தோல்விக்கு காரணம் என அனைவரும் கருதுகிறார்கள். ஆனால் சொந்த படையையே, காங்கிரஸ் சேதப்படுத்தி உள்ளது. பல ஆண்டுகளாக பாதுகாப்புத்துறையை புரோக்கர்களின் கூடாரமாக காங்கிரஸ் மாற்றி வைத்திருந்தது. பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டம் எப்போது நடக்கும் என்பதை கூட இடைத்தரகரான மைக்கேல் தெரிந்து வைத்துள்ளார்.
நெருக்கமானவர்....
அரசு ஆவணம் தொடர்பான விபரங்கள் கூட தெரிந்து வைத்துள்ளார். ரபேல் ஒப்பந்தத்தை 10 ஆண்டுகள் தாமதப்படுத்தி உள்ளார் என்றால் நாட்டின் பாதுகாப்பை ஆபத்தாக்கும் எத்தகைய பங்களிப்பு அவருக்கு இருந்துள்ளது. அந்த இடைத்தரகர் சோனியா குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடியின் கூட்டணி குறித்த பேச்சு, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.