சிட்னியில் இன்று நடக்கிறது: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

வெள்ளிக்கிழமை, 11 ஜனவரி 2019      விளையாட்டு
sydney ind-aus clash 2019 01 11

சிட்னி : ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடக்கிறது.

டெஸ்ட் தொடரை...

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆஸ்திரேலியா மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

முதல் ஒருநாள் போட்டி...

அடுத்து இரு அணிகளும் 3 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகின்றன. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று சிட்னி நகரில் நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 2-வது போட்டி 15-ந்தேதி அடிலெய்டிலும், 3-வது போட்டி 18-ந்தேதி மெல்போர்னிலும் நடக்கிறது.

பும்ராவுக்கு ஓய்வு

டெஸ்ட் தொடரில் பெற்ற வெற்றி உத்வேகத்தை ஒருநாள் போட்டியிலும் தொடர இந்தியா முனைப்பில் உள்ளது. பேட்டிங்கில் ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, அம்பதி ராயுடு, டோனி, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக் போன்றோர் உள்ளனர். பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, கலீல் அகமது, சாஹல், குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் உள்ளனர். டெஸ்ட் தொடரில் கலக்கிய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஆஸி.க்கு நெருக்கடி...

இந்தியா பேட்டிங், பந்து வீச்சில் சம பலத்துடன் உள்ளது. இதனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டி தொடரில் சாதிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது. டெஸ்ட் தொடரை இழந்ததால் அந்த அணி வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அந்த அணியில் உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், பீட்டர் சிடில், ஆடம் ஜம்பா, நாதன் லயன், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் போன்ற வீரர்கள் உள்ளனர். இதுவரை இரு அணிகளும் 128 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் இந்தியா 45 முறையும், ஆஸ்திரேலியா 73 முறையும் வெற்றி பெற்றன. 10 ஆட்டத்தில் முடிவு இல்லை.

இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, டோனி, தினேஷ் கார்த்திக், கேதர் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்த்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், ஜடேஜா, புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், கலீல் அகமது.

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி, ரிச்சர்ட்சன், பில்லி ஸ்டேன்லேக், ஜேசன் பெரன்டார்ப், பீட்டர் சிடில், நாதன் லயன், ஆடம் ஜம்பா, ஆஸ்டன் டர்னர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து