வெளிநாட்டினர் திறமைசாலிகளாக இருந்தால் மட்டுமே இனி எச்1-பி விசா: டிரம்ப் அறிவிப்பு

சனிக்கிழமை, 12 ஜனவரி 2019      உலகம்
trump 2019 01 09

வாஷிங்டன் : அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டினர் திறமைசாலிகளாக இருந்தால் மட்டுமே இனி எச்1-பி விசா வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் எச்-1 பி விசா மூலம் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு உள் நாட்டினருக்கு பணி வழங்குவதில் ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்டவை முன்னுரிமை வழங்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டார். அதன் காரணமாக எச்-1 பி விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிவது கனவாகி போனது. இந்த நிலையில், அதிபர் டிரம்ப் டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில் எச்-1 பி விசா வழக்குவதற்கான நடைமுறைகள் விரைவில் மாற்றப்படும். அது மிகவும் எளிமையாக இருக்கும். வெளிநாட்டினர் இங்கேயே தங்கியிருக்கலாம். குடியுரிமையும் பெறலாம். ஆனால் அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டினர் திறமைசாலிகளாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். எனவே எச்-1 பி விசாவுக்கான விண்ணப்பம் கடுமையாக ஆராயப்படும். அதன் பிறகே வெளிநாட்டினருக்கு அதற்கான விசா வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பின் கடந்த 2 ஆண்டுகளாக ‘எச்-1 பி’ விசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதனால் பணி நீட்டிப்பு கிடைப்பதில் சிக்கல் இருந்தது. அதன் காரணமாக அங்கு பணிபுரிந்து வரும் இந்தியர்களும், புதிதாக பணிக்கு அமெரிக்கா செல்ல தயாராக இருந்த இளைஞர்களுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. தற்போது டிரம்பின் இந்த அறிவிப்பால் இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து