முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி. சட்டத்தில் வணிகர்கள் பதிவு செய்வதற்கான உச்சவரம்பை 40 லட்சம் ரூபாயாக உயர்த்த பரிசீலனை - தமிழக அரசு புதிய தகவல்

சனிக்கிழமை, 12 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஜி.எஸ்.டி. சட்டத்தில் வணிகர்கள் பதிவு செய்வதற்கான ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்துவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்த்த முடிவு...

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

புதுடில்லியில் 10-ம் தேதி நடைபெற்ற 32-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டத்தில் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். கூடுதல் தலைமைச் செயலாளர் / வணிகவரி ஆணையர் சோமநாதனும் கலந்து கொண்டார். சிறு மற்றும் குறு வணிகர்கள் மற்றும் வணிக சங்கங்கள் அமைச்சர் ஜெயகுமாரிடம் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டத்தின் கீழ் எதிர்கொள்ளும் இடையூறுகளை களையுமாறு முறையீடு செய்ததின் பேரில் அமைச்சர் ஜெயகுமார், 32-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக்கூட்டத்தில் அத்தகைய வணிகர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை களைவது குறித்து விரிவாக விவாதித்தார். அதன்பேரில் அவ்வணிகர்கள் பயன்பெறும் வகையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது. இணக்க முறையில் வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் ஒரு சதவீதம் வரி செலுத்துவதற்கு தற்போதுள்ள உச்சவரம்பு ரூ.1 கோடியிலிருந்து ரூ.1.50 கோடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு பரிசீலனை...

மேலும், சிறு சேவைகள் வழங்குவோரின் ஆண்டு மொத்த தொகை ரூ.50 லட்சத்திற்குள் இருக்கும் பட்சத்தில் இணக்க வரி முறையின் கீழ் 6 சதவீதம் வரி செலுத்திட முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம் சிறுசேவை வழங்கும் தனிநபர்கள் / சிறு நிறுவனங்கள் / வல்லுநர்கள் மாதந்தோறும் தாக்கல் செய்யவேண்டிய நமூனா மற்றும் வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கான உச்சவரம்பு தொகை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக உயர்த்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது. எனினும், உச்ச வரம்பு உயர்த்துவது குறித்த முடிவினை அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்து ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கவும் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. அதன் பேரில் உச்ச வரம்பு உயர்த்துவது குறித்த முடிவு அரசின் பரிசீலனையிலுள்ளது. மேலும் இணக்க முறையில் தற்போது காலாண்டுக்கு ஒருமுறை தாக்கல் செய்யவேண்டிய நமூனாவிற்கு பதில் ஆண்டு நமூனா மட்டும் தாக்கல் செய்யவதற்கு முடிவு செய்யப்பட்டது. அத்துடன் அத்தகைய வரிசெலுத்துவோர் காலாண்டுக்கு ஒருமுறை வரி செலுத்த வேண்டும்.

பரிந்துரை வழங்க முடிவு...

அனைவருக்கும் வீட்டு வசதி என்ற அரசின் நோக்கத்தினை நிறைவேற்றும் பொருட்டும் பொதுமக்களுக்கு வரி சுமை குறைப்பதன் பொருட்டும், குடியிருப்பு கட்டடங்கள் தொடர்பான கட்டுமான தொழில் சேவைகளுக்கு இணக்க முறையில் வரி செலுத்துவது குறித்து ஏழு உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று பரிசீலித்து பரிந்துரை வழங்க முடிவு செய்யப்பட்டது. மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்ற கூட்டத்தில் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் படிவத்தில் தகவல் தொழில்நுட்பமல்லாத பிற குறைகளையும் சரி செய்வதற்கு வழிவகை செய்ய இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து