டோனியை அவுட் செய்தது அதிர்ஷ்டம்தான்: ஆஸ்திரேலிய பவுளர் ரிச்சர்ட்சன் ஒப்புதல்

சனிக்கிழமை, 12 ஜனவரி 2019      விளையாட்டு
Richard 2019 01 12

சிட்னி : சிட்னி ஒருநாள் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என்று முன்னிலை வகித்தாலும் டோனி விக்கெட்டை வீழ்த்தியது தங்கள் அதிர்ஷ்டமே என்று ஆட்ட நாயக பவுலர் ஜியே ரிச்சர்ட்சன் ஒப்புக் கொண்டார். இவர் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தன் சிறப்பான பந்து வீச்சை மேற்கொண்டார்.

டோனி வெளியேறினார்

4/3 என்ற நிலையில் ரோஹித் சர்மாவுடன் இணைந்து டோனி நிதானமென்றால் கொஞ்சம் ஓவர் நிதானமாக ஆடினாலும் ஒரு கட்டத்தில் 28 ஒவர்களில் 137 ரன்களைச் சேர்த்த போது இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது, ஆனால் அப்போது பெஹ்ரண்டாஃப் பந்தில் எல்.பி. தீர்ப்பளிக்கப்பட்டார் டோனி, ஆனால் பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆன பந்து, ஆகவே நாட் அவுட், களநடுவர் தீர்ப்பை மாற்றும் டி.ஆர்.எஸ் ரிவியூவை ஏற்கெனவே ராயுடு விரயம் செய்ததால் டோனி வெளியேற வேண்டியதாயிற்று.

எங்களது அதிர்ஷ்டமே...

இது குறித்து ரிச்சர்ட்சன் கூறும்போது, “ரோஹித், டோனி கூட்டணி எங்களிடமிருந்து ஆட்டத்தைப் பறித்துச் சென்றிருக்கும், ஆனால் டோனி விக்கெட்டை எல்.பியில் வீழ்த்தியது எங்களது அதிர்ஷ்டமே. அங்கிருந்து தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்திக்கொண்டிருந்தோம். ரோஹித் சர்மா நன்றாக ஆடினார், நாங்கள் எப்படி பிட்சைப் புரிந்து கொண்டோமோ அவரும் புரிந்து கொண்டு ஆடினார். பொறுமையுடன் அடிக்க வேண்டிய பந்துகளை அடித்து ஆடினார். இடைவெளியை நன்றாகப் பயன்படுத்தி ரன்கள் குவித்தார்.

கடினம் என்பதை...

ரோஹித் சர்மா அபாயகரமான பேட்ஸ்மென் என்பதை புரிந்து வைத்துள்ளோம், அதனால்தான் அவருக்கு சிங்கிள் கொடுத்து எதிர்முனை வீரரை அதிகம் பேட் செய்ய வைத்தோம். இது நல்ல பிட்ச்தான், ஆனால் வேகம் இல்லை, ஆகவே பந்து மென்மையாகும் போது ஸ்லோயர் பந்துகளை வீசினோம், அதுவும் நன்றாக வேலை செய்தது. 280 நல்ல சவாலான இலக்குதான், சிட்னியில் நீளமான பவுண்டரிகள் உள்ளன, ஆகவே பவுண்டரிகள் வருவது கடினம் என்பதை உணர்ந்தோம். இவ்வாறு ரிச்சர்ட்சன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து