முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மாலை மகரவிளக்கு பூஜை

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜனவரி 2019      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பன் கோவிலின் முக்கிய நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை இன்று மாலை 6.35 மணிக்கு நடைபெறுகிறது.

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் வருடம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட பல்வேறு பூஜைகள் நடத்தப்படும்.இவற்றில் ஆண்டுக்கு ஒருமுறை சபரிமலை கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். இந்த ஆண்டு மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது.

அன்று முதல் சுவாமி அய்யப்பனுக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை இன்று 14-ந்தேதி மாலை 6.35 மணிக்கு நடக்கிறது. மகரவிளக்கு பூஜையின்போது சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறும்.மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனத்தை காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.

இந்த முறை சபரிமலை கோவிலில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்வது தொடர்பாக போராட்டங்கள் நடந்து வருவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நவீன கண்காணிப்பு கேமிராக்கள் மூலமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மகரவிளக்கு பூஜையின்போது பந்தளம் அரண்மனையில் இருந்து எடுத்து வரப்படும் திருவாபரணங்கள் சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும். இந்த திருவாபரண ஊர்வலம் பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று முன்தினம்  பகலில் சபரிமலை நோக்கி புறப்பட்டது. திருவாபரண ஊர்வலத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவுப்படி பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஊர்வலம் செல்லும் பாதைகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்கக் கூடாது என போலீசார் தடை விதித்துள்ளனர். வழி நெடுக பக்தர்களின் வரவேற்புடன் இன்று மாலை திருவாபரண ஊர்வலம் சபரிமலை சன்னிதானத்தை சென்றடையும்.அதன் பிறகு 18-ம் படி வழியாக திருவாபரணம் கொண்டு செல்லப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும். மகரவிளக்கு பூஜையையொட்டி இன்று பகல் பூஜைக்கு பின்னர் பக்தர்கள் 18-ம்படி ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் முடிந்த பின்னரே பக்தர்கள் 18-ம்படி ஏற அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து 18-ந்தேதி வரை சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும். அன்றுடன் நெய் அபிஷேகம் நிறுத்தப்படும். 19-ந்தேதி இரவு வரை சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 20-ந்தேதி இரவு கோவில் நடை சாத்தப்படும்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து