முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பஸ்கள் மூலம் 5 லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம்

திங்கட்கிழமை, 14 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கடந்த 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணித்து உள்ளனர். இதன் மூலம் ரூ.8.26 கோடி வசூலாகி உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கூடுதல் சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது. சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு வழக்கமாக இயக்கக்கூடிய 2,275 பேருந்துகளுடன், சிறப்புப் பேருந்துகளாக ஜனவரி 11 முதல் 14 வரை 4 நாள்களுக்கு 5,163 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் என ஒட்டுமொத்தமாக 14,263 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக வெளியூர் பேருந்துகள் கோயம்பேடு பேருந்துநிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரெயில்நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம் என 5 இடங்களில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

ரூ.8.26 கோடி வசூல்

பேருந்துகளின் இயக்கம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஆய்வு நடத்தினார். பேருந்துகளை பாதுகாப்பாக ஓட்டிச் செல்ல வேண்டுமென ஓட்டுநர் களிடம் அவர் அறிவுறுத்தினார். இந்நிலையில், சென்னையில் இருந்து 11-ந் தேதியன்று இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை – 3,023. அவற்றில் பயணித்தவர்கள் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 301 பேர். இவர்களில் சென்னையில் 19 ஆயிரத்து 193 பேர் முன்பதிவு செய்திருந்தனர். 12-ம் தேதியன்று இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை – 3,764. அவற்றில் பயணித்தவர்கள் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 648 பேர். இவர்களில் சென்னையில் 23 ஆயிரத்து 65 பேர் முன்பதிவு செய்திருந்தனர். 13-ம் தேதி 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கும் மேலான பயணிகள் சென்றனர்.ஆக கடந்த மூன்று நாட்களில் அரசு பேருந்துகளில் 4.93 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். முன்பதிவு மூலம் ரூ.8.26 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரெயிலில்…

சொந்த ஊருக்கு செல்ல மக்கள் திரண்டதால் அண்ணாசாலை, ஜிஎஸ்டி மற்றும் சென்னையின் உட்புறச்சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்தினர். இதேபோல், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டிகளில் இருக்கை பிடிக்க நீண்ட தூரத்துக்கு வரிசையில் மக்கள் காத்திருந்தனர். பயணிகளை போலீசார் ஒழுங்குப்படுத்தி அனுப்பினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து