முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

புதன்கிழமை, 16 ஜனவரி 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் நடைபெறும் திருவிழாக்களிலேயே தைப்பூசத் திருவிழா மிகவும் முதன்மையானதாகும். இவ்விழாவின் முக்கிய அம்சமே பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசனம் செய்வது தான். இவ்வருடத்திற்கான தைப்பூசத் திருவிழா பெரியநாயகி அம்மன் கோவிலில் 15ம் தேதி நடந்தது. அதனைத் தொடர்ந்து தெற்குரதவீதி, மேற்குரதவீதி சந்திப்பில் உள்ள அபரஞ்சி விநாயகர் கோவிலில் வாஸ்து சாந்தி பூஜையும், பெரியநாயகி அம்மன் கோவில் முன்பு உள்ள தீப ஸ்தம்பம் அருகே புனித மண் எடுத்து சிறப்பு பூஜைகளும் நடந்தது.
பின்னர் பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், மயூரயாகம் நடைபெற்று கொடிப்படம் நான்குரதவீதிகளின் வழியே கொண்டு வரப்பட்டது. வேல், மயில், சேவல் உருவம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடி படத்திற்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. அப்போது முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் கொடிக்கட்டு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழங்க பக்தி பெருக்கில் முருகப்பெருமானை வழிபட்டனர். கொடியேற்றத்தைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கும், வாகனங்களுக்கும் காப்புக் கட்டப்பட்டது.
தைப்பூசத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 20ம் தேதி மாலை வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து வெள்ளி ரதத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது. மறுநாள் 21ம் தேதி மாலை தைப்பூசத் தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியை நோக்கி பாதயாத்திரையாக நடந்து வந்தவண்ணம் உள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் குடிநீர், கழிப்பிடம், தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. மேலும் முக்கிய நகரங்களில் இருந்து பழனிக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பழனி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. 10 நாட்கள் நடைபெறும் தைப்பூசத் திருவிழா வரும் 24ம் தேதி தெப்ப உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து