முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டாலின் ஆசை நிறைவேறாது: தி.மு.க. எம்.எல்.ஏக்களே சட்டமன்ற தேர்தல் வருவதை விரும்பவில்லை - அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

வியாழக்கிழமை, 17 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சட்டமன்றத்திற்கு தேர்தல் வரவேண்டும் என்ற ஸ்டாலின் ஆசை நிறைவேறாது என்றும், தி.மு.க. எம்.எல்.ஏக்களே தேர்தல் வருவதை விரும்பவில்லை என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். மேலும், வரும் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்  அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மகிழ்ச்சி அடைந்திருப்பார்

எம்.ஜி.ஆரின் புகழ் இந்த உலகம் உள்ளவரை நிலைத்திருக்கவேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவு இன்றைக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா. சென்னையில் மிகப்பெரிய நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு வளைவு அமைக்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் நினைவை போற்றும் வகையில் 100 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். இந்த அரசு எம்.ஜி.ஆரின் புகழை போற்றுக்கின்ற அரசு. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நிச்சயமாக மன மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று தெரிவித்தார்.

எந்த மாற்றமும் இல்லை...

தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தெரிவித்த கருத்து குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார் 2021-ம் ஆண்டில் தான் சட்டமன்ற தேர்தல் வரவேண்டும் என்று

மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். ஒரு சட்டமன்ற தேர்தலுக்கு 3 ஆயிரம் கோடி செலவாகிறது. தேர்தல் அடிக்கடி வரக்கூடாது. ஜனநாயக அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இது. மக்கள் அரசு. இந்த அரசு அனைத்து தரப்பு மக்களும் பாராட்டை பெற்றது. 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். இதில் எந்த மாற்றமும் இல்லை.

5 ஆண்டுகள் நிறைவு...

ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு ஏன் இந்த அவசரம். அவரைப் பொறுத்தவரை குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும். சட்டமன்றத்தைப் பிடித்து முதல்வராக வேண்டும். இல்லை என்றால் இந்த ஆட்சியே இல்லாமல் தேர்தல் நடக்கவேண்டும். இரண்டு ஆசைகளும் நிறைவேறாதவை தான். ஆனால் அவர் தேர்தலை விரும்பினாலும், அவர் கட்சி எம்.ஏல்.ஏ.க்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஒரு முறை மக்களைச் சந்தித்து ஒட்டு வாங்கி சட்டமன்றத்திற்கு வரும்போது 5 ஆண்டுகள் நிறைவு செய்யவேண்டும் என்பது தான் எல்லோரின் மனதிலும் இருக்கும். அது அவர்களுக்கே தெரியும். அவர்களுக்குச் சீட்டு கிடைக்குமா? சீட்டு கிடைத்தால் மறுபடியும் வெற்றிபெற முடியுமா என்று நினைப்பார்கள். இந்த இரண்டு பிரச்னை அவர்களுக்கு உள்ளது.

தேர்தலை விரும்பவில்லை...

இப்படிப்பட்ட நிலையில் 5 ஆண்டுகள் முழுமையாகச் சட்டமன்ற உறுப்பினராக இருக்கவேண்டும் என்று தானே நினைப்பார்கள். எனவேதான் அவர்கள் தேர்தல் வருவதற்கு விரும்பவில்லை. விரும்பாத ஒன்றை ஸ்டாலின் எந்த வகையிலாவது நிறைவேற்றவேண்டும் என்றால் அவர் ஆசை நிறைவேறாது என்று அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

கூட்டணி குறித்து முடிவு...

இதைத் தொடர்ந்து நிருபர்கள், தமிழகத்தில் பாஜக காலுன்றவேண்டும் என்றால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்று ஆடிட்டர் குருசாமி தெரிவித்துள்ள கருத்து குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார், அவர் ஒரு பத்திரிகையாளராக இருந்துகொண்டு ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அது அவரது ஆசையாக இருக்கலாம். தேர்தல் வரட்டும். அந்த நேரத்தில் முடிவு செய்து அறிவிப்போம். யாரோடு யார் கூட்டணி என்பது அந்த நேரத்தில் முடிவுசெய்யவேண்டிய ஒன்று என்று தெரிவித்தார்.

அரசியல் செய்கிறார்கள்...

இதையடுத்து கொடநாடு விவகாரம் குறித்து கேட்டபோது, செத்தவர்களை வைத்து அரசியல் செய்வது இப்போது பேஷன் ஆகிவிட்டது. வேறு ஒன்றும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆட்சி மீது எத்தனையே குற்றம் சொல்லி, புழுதிவாரி தூற்றி பார்த்தார்கள். என்ன என்னமோ செய்து பார்த்தார்கள். முடியவில்லை. இப்போது செத்து போனவரை வைத்து அரசியல் செய்கிறார்கள். எதிர்க்கட்சிகளுக்கு இது எல்லாம் கைவந்த கலை. தினகரன் தரப்பிலிருந்தும், தி.மு.க. தரப்பிலிருந்தும் கண்டிப்பாக வரும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து