முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்திய அணி வரலாற்று வெற்றி; தொடரையும் கைப்பற்றி சாதனை

வெள்ளிக்கிழமை, 18 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மெல்போர்ன் : டோனி மற்றும் கேதர் ஜாதவ் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

சமநிலையில்...

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை முதல் முறையாக வென்று சாதனை படைத்த இந்திய அணி, அடுத்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும், 2-வது ஆட்டத்தில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3-வது ஒரு நாள் போட்டி மெல்போர்னில் நேற்று நடந்தது.

சாதனை படைக்க...

இதற்கு முன், இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு நாள் தொடரை, கைப்பற்றியதில்லை. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று, ஒரு நாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றினால், அது சாதனையாக இருக்கும். இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு கடந்த போட்டியில் சிறப்பாக இருந்தது. கேப்டன் விராத் கோலி அபார சதம் அடித்தார். அனுபவ வீரர் தோனி, தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆடி அரை சதம் அடித்தார்.

விஜய் சங்கர் அறிமுகம்...

பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். அதனால் இந்திய அணி, நம்பிக்கையுடன் நேற்று களமிறங்கியது. நேற்றைய போட்டியில் தமிழக வீரர், ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அவருக்கு முதல் ஒரு நாள் போட்டி. ராயுடு, குல்தீப், முகமது சிராஜ் ஆகியோர் நீக்கப்பட்டு, கேதர் ஜாதவ், சாஹல் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பேரன்டோர்ஃபுக்கு ஓய்வு

ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கில் மார்ஷ், ஹேன்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், ஸ்டோயினிஸ் ஆகியோரையே நம்பி இருக்கிறது. கேப்டன் ஆரோன் பின்ச், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரி ஆகியோர் ஏமாற்றி வருகின்றனர். வேகப்பந்து வீச்சாளர் பேரன்டோர்ஃபுக்கு ஓய்வு அளிக்கப் பட்டுள்ளது. அவர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் லியான் ஆகியோருக்குப் பதிலாக, ஸ்டான்லேக், ஆடம் ஜம்பா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

அணி விவரம்:

இந்திய அணி: விராத் கோலி (கேப்டன்) ரோகித் சர்மா, தவான், தோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஜடேஜா, புவனேஸ்வர்குமார், முகமது ஷமி, சாஹல்.

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் பின்ச்  (கேப்டன்),. அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், ஹேண்ட்ஸ்கோம்ப், ஸ்டோயினிஸ், மேக்ஸ்வெக், ரிச்சர்ட்சன், ஸ்டான்லேக், பீட்டர் சிடில், ஆதம் ஜம்பா.

சஹால் அபாரம்...

போட்டி தொடங்கி முதல் ஓவரை புவனேஷ்வர்குமார் வீசினார். இரண்டாவது பந்தை அவர் வீசும்போது மழை குறுக்கிட்டதால் போட்டி தடை பட்டது. ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அலெக்ஸ் கேரி (5 ரன்கள்) புவனேஷ் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் பிஞ்ச் 14 ரன்களில் வெளியேறினார்.  உஸ்மான் காவ்ஜா (34 ரன்கள்), ஷான் மார்ஷ் ( 39 ரன்கள்), ஹேன்ட்ஸ்கோம்ப் ( 58 ரன்கள்) ஆகியோர் சீரான இடைவெளியில் சாஹல் சுழலில் சிக்கினர்.

231 ரன்கள் இலக்கு...

பின்னர் வந்த வீரர்கள், சொல்லிக்கொள்ளும்படி பெரிய அளவில் விளையாடவில்லை. சாஹல்  தொடர்ந்து, சுழலில் ஆதிக்கம் செலுத்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 48.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில், சாஹல் 6 விக்கெட்டுகளையும், முகம்மது சமி, புவனேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து, 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.

4-வது வீரராக...

வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டதால் ரன் அடிக்க கடும் சிரமமாக இருந்தது. மேலும் மைதானம் மிகப்பெரியது என்பதால் பவுண்டரி எளிதாக செல்லவில்லை. ஒன்றிரண்டு ரன்களாகத்தான் எடுக்க முடிந்தது. ரோகித் சர்மா 9 ரன்னிலும், ஷிகர் தவான் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் விராட் கோலி 4-வது வீரராக டோனியை பேட்டிங் செய்ய அழைத்தார். விராட் கோலி - டோனி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியா 26.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. டோனி சிறப்பாக விளையாடியதால் விராட் கோலி நம்பிக்கையுடன் ரன்கள் அடிக்க துவங்கினார். இந்தியாவின் ஸ்கோர் 113 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இந்தியாவிற்கு நெருக்கடி

இதனால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. 4-வது விக்கெட்டுக்கு டோனியுடன் கேதர் ஜாதவ் இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடினார்கள். இந்தியா 38 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. அதேவேளையில் டோனி 74 பந்தில் அரைசதம் அடித்தார். இந்தியா 40 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 60 பந்தில் 66 ரன்கள் தேவைப்பட்டது. 42-வது ஓவரில் 2 ரன்களும், 43-வது ஓவரில் 5 ரன்களும், 44-வது ஓவரில் 1 ரன்களும் அடித்ததால் இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது.

ஜாதவ் அரைசதம்...

36 பந்தில் 52 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டாய்னிஸ் வீசிய 45-வது ஓவரில் டோனி ஒரு பவுண்டரி அடிக்க இந்தியாவிற்கு 8 ரன்கள் கிடைத்தது. இதனால் டென்சன் சற்று குறைந்தது. 46-வது ஓவரில் கேதர் ஜாதவ் ஒரு பவுண்டரி அடிக்க இந்தியாவிற்கு 11 ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி 18 பந்தில் 27 ரன்கள் தேவைப்பட்டது. 48-வது ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். முதல் பந்தை டோனி தூக்கியடித்தார். பந்தை மிட்ஆஃப் திசையில் நின்ற பிஞ்ச் கேட்ச் பிடிக்க தவறினார். இதில் இந்தியாவிற்கு இரண்டு ரன்கள் கிடைத்தது. அடுத்த பந்தை பவுண்டரிக்கு தூக்கினார். கடைசி பந்தை கேதர் ஜாதவ் பவுண்டரிக்கு விரட்டினார். அத்துடன் 52 பந்தில் 5 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.

இந்தியா வெற்றி...

இதனால் இந்தியாவிற்கு 48-வது ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. கடைசி 12 பந்தில் 14 ரன்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரை சிடில் வீசினார். 2-வது பந்தில் கேதர் ஜாதவ் பவுண்டரி அடித்தார். 3-வது பந்தில் மூன்று ரன்கள் அடித்தார். 5-வது பந்தில் டோனி பவுண்டரி விளாசினார். 49-வது ஓவரில் இந்தியா 13 ரன்கள் அடித்தது. இதனால் கடைசி ஓவரில் 1 ரன் தேவைப்பட்டது. 2-வது பந்தை கேதர் ஜாதவ் பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 49.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-1 எனக்கைப்பற்றி சாதனைப்படைத்துள்ளது.

சாதனை படைத்தது...

டோனி 114 பந்தில் 87 ரன்கள் எடுத்தும், கேதர் ஜாதவ் 57 பந்தில் 61 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2 போட்டிகளில் இந்தியா 2 வெற்றி பெற்றதால் தொடரை கைப்பற்றியது. ஏற்கனவே டெஸ்ட் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டி தொடரை வென்று சாதனை படைத்ததுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து