முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் தி.மு.க. முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 18 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, கோடநாடு சம்பவம் கூலிப்படையால் செய்யப்பட்டது என்றும், இந்த விவகாரத்தின் பின்னணியில் தி.மு.க. உள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி கொள்ளை சம்பவம் அரங்கேறியது. வீட்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவன் ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஷயான், மனோஜ் உள்ளிட்டோர் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்த நிலையில் கோடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி, ஷயான், மனோஜ் மற்றும் ‘தெகல்கா’ புலனாய்வு பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ம் தேதி டெல்லியில் வீடியோ வெளியிட்டனர். “என் மீதான குற்றச்சாட்டில் துளி அளவும் உண்மை இல்லை” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். மேலும், இதற்கு பின்புலனாக உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொதுக்கூட்டம்...

இந்நிலையில் சென்னை காட்டுப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது.,

பல தலைவர்களின் பிறந்தநாளை பார்த்துள்ளோம், சிலர் உண்டியல் வைப்பார்கள், சிலர் எடைக்கு எடை பணம் கேட்பார்கள், இவர்களுக்கு மத்தியில் வித்தியாசமாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். மக்களுக்கு கொடுத்து கொடுத்து அவர்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர் எம்.ஜி.ஆர். காலத்தால் அழிக்க முடியாத திட்டங்களை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் 51 லட்சம் குழந்தைகள் சத்துணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

பின்னணியில் தி.மு.க....

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கோடநாடு தனியார் கட்டுப்பாட்டில் உள்ளது. கோடநாடு சம்பவம் கூலிப்படையால் செய்யப்பட்டது. ஆதாரம் இருந்தால் எங்களை சசிகலா குடும்பத்தினர் சும்மா விடுவார்களா ? கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் தி.மு.க. உள்ளது. சயான், மனோஜை ஜாமீனில் எடுத்தது தி.மு.க. தான்.

தவிடு பொடியாக்கி... 

தெகல்கா முன்னாள் ஆசிரியரின் பேட்டி தி.மு.க.வால் செய்யப்பட்ட நாடகம். வாலையாறு பகுதியை சேர்ந்த மனோஜ் மீது கேரளாவில் கொலை வழக்கு உள்ளது. கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கோடநாடு விவகாரத்தில் திட்டமிட்டு தி.மு.க. நடத்தும் நாடகத்தை சட்டப்படி தவிடு பொடியாக்கி காட்டுவேன். ரூ.1,000 பொங்கல் பரிசு கொடுத்ததால் பொறுக்க முடியாமல் பொய் வழக்குகளை ஜோடிக்கின்றனர்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து