முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்தக் காலத்திலும் ஸ்டாலினால் முதல்வர் பதவிக்கு வர முடியாது: கள்ளிக்குடி கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பரபரப்பு பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

மதுரை, தன் குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்திக்க கூடிய கட்சிதான் தி.மு.க. என்றும், எந்தக் காலத்திலும் ஸ்டாலினால் முதல்வர் பதவிக்கு வர முடியாது என்றும் மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் நடந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடியை தனி வட்டமாக அறிவித்ததற்கு நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

பெரிய வட்டங்களை தனியாகப் பிரித்து சிறிய வட்டங்களாகப் பிரிக்கும் போதுதான் கடைக்கோடிப் பகுதியில் உள்ள மக்கள் எளிதாக வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று தங்களுக்குத் தேவையான மற்றும் உதவிகளைப் பெற முடியும். அந்த வகையில்தான் கள்ளிப்பட்டி வட்டம் தனி வட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாவின் அரசுதான் அதிக எண்ணிக்கையில் புதிய வட்டங்களை அமைத்துக் கொடுத்திருக்கிறது. இன்றைக்கு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த அரசை குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் காலத்தில் எதையும் செய்ததாக தெரியவில்லை. எந்தச் சாதனையும் பெரிதாக செய்ததாக தெரியவில்லை. மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள். மாநிலத்திலும் ஆட்சி செய்தார்கள். ஆனால் அவர்கள் குடும்பம் மட்டும் வளம் பெற்றது. தி.மு.க. கட்சி என்றால் அந்த கட்சிதான் குடும்ப கட்சி. ஆனால் அ.தி.மு.க. ஒட்டுமொத்த மக்களுக்கும் சொந்த கட்சி. இந்தக் கட்சியில் ஜனநாயகம் இருக்கிறது. இந்தக் கட்சியில் சாதாரண நிலையில் இருப்பவர்களும் உயர்ந்த நிலைக்கு வர முடியும். சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, ஏன் முதல்வராக கூட அ.தி.மு.க.வில்தான் வர முடியும். வேறு எந்தக் கட்சியிலும் வர முடியாது. தி.மு.க.வில் கருணாநிதி முதல்வராக இருந்தார். அதற்குப் பிறகு ஸ்டாலின் முதல்வராக வருவதற்கு துடிக்கிறார். எந்தக் காலத்திலும் அவர் முதல்வராக வர முடியாது. அது வேறு விஷயம். அதற்குப் பிறகு வாரிசு. அவரின் மகன் உதயநிதியை கட்சிக்கு கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டி முயன்று பார்க்கிறார். இதுதான் வாரிசு அரசியல். மக்களைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். தன் மக்களைப் பற்றி சிந்திக்கக் கூடிய கட்சிதான் தி.மு.க.

சிந்திக்கக் கூடிய கட்சி. என்னைப் பொறுத்தவரை கிராமத்தில் பிறந்து வாழ்ந்து வருபவன். மேடையில் இருப்பவர்கள் பெரும்பாலும் கிராமத்தில் பிறந்து வாழ்ந்து வருகிறவர்கள். கிராமத்தில் இருக்கின்ற விவசாயிகளுக்கு என்ன பிரச்சனை என்று தெரியும். அதில் வேலை செய்கின்றவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதும் தெரியும். மக்களோடு மக்களாக நின்று பழகி படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு உங்களின் பேராதவரோடு தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கிறேன். ஆகவே விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கின்ற அரசு இந்த அரசு என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல விவசாய தொழிலாளி வளர வேண்டும். வாழ வேண்டும். சிரித்து வாழ வேண்டும். மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். அதற்குத் தேவையான திட்டங்களை அம்மாவின் அரசு வழங்கும். அம்மா வசதி படைத்த குடும்பத்தில் பிறந்தவர். சாதாரண குடிசையில் வாழும் ஏழைகள் கூட கிரைண்டர், மிக்ஸியை  பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மிக்ஸி, கிரைண்டர் வழங்கியவர் அம்மா. அவர் எடுத்த நடவடிக்கையால் இன்றைக்கு மக்கள் செழிப்போடு இருக்கின்ற காட்சியை பார்க்கின்றோம். எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே திட்டமிட்டு இன்றைக்குப் பொய்யான செய்தியைப் பரப்பி வருகிறார்கள். பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளீர்கள். பொங்கல் பரிசுப் பொருட்களுடன் ஆயிரம் ரூபாயை வழங்கினோம். இதைக் கூட எதிர்க்கட்சிகள் குறை கூறினார்கள். தி.மு.க. இதனைத் தடுத்து நிறுத்த வழக்கு போட்டது. ஏழைகளுக்கு கொடுப்பதைக்கூட தடுத்து நிறுத்துகிற கட்சிதான் தி.மு.க. எம்.ஜி.ஆர். அம்மா ஆகிய இருவரும் மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள். மக்கள்தான் அவர்களுக்குக் குடும்பம். மக்களின் பிரச்சனையை தன் பிரச்சனையாக கருதிச் செயல்பட்டவர்கள். அந்த வழியில் வந்த அம்மாவின் அரசையும் மக்கள்தான் வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த அரசுக்குத் துணை நிற்பவர்கள் மக்கள். அது போல இந்த இயக்கத்திற்குத் தலைவர் என்பவர் இல்லை. தொண்டர்களால் இயக்கப்படுகின்ற ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டும்தான். நாடாளுமன்ற தேர்தல் விரைவாக வரவுள்ளது. என்னவெல்லாமோ பொய்களை சொல்வார்கள். இன்றைக்கு கிராமம் கிராமாக சென்று பார்க்கிறார்கள். இத்தனை நாட்களாக கிராமத்தில் உள்ள மக்களை ஸ்டாலின் கண்களுக்கு தெரியவில்லை. கிராம மக்களுக்கு கொடுப்பதையே தடுத்து நிறுத்துபவர்கள், இவர்கள் எப்படி நல்லது செய்யப் போகிறார்கள். இதனை எல்லாம் நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நம்முடைய திட்டங்களை நிறைவேற்றுவதற்காக புதிய திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வர வேண்டியதற்காக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து மாபெரும் வெற்றியைத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இன்றைக்குத் தமிழகம் அனைத்து வகையிலும் முதன்மை மாநிலமாக விளங்குவதற்கு அரசு தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.

இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாத்தூர் வழியாக நெல்லை சென்றார். சாத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து