முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 123-வது பிறந்த நாள்: சென்னையில் திருவுருவப்படத்திற்கு இன்று அமைச்சர்கள் மாலையணிவித்து மரியாதை

செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அவரது 123-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர் பெருமக்கள், இன்று காலை 8.30 மணியளவில் மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளனர். 

அரசு விழாவாக...

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்தநாளன்று தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த தினமான ஜனவரி 23-ம் நாள் (இன்று) ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பார்வர்டு பிளாக்...

ஜானகிநாத் - பிரபாவதிக்கு ஒன்பதாவது மகனாக 1887ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் நாள் ஒரிஸாவில் கட்டாக் நகரில் கோதனியா என்னும் ஊரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். 1919-ம் ஆண்டு பி.ஏ. தத்துவம் படிப்பில் முதல் வகுப்பில் தேறினார். தந்தையின் விருப்பத்தின் பேரில் இங்கிலாந்து சென்று ஐ.சி.எஸ். படித்து அந்த தேர்வில் தேர்ச்சியடைந்தார்.  இளமை துடிப்பு கொண்ட நேதாஜிக்கு காந்தியின் மென்மையான அணுகுமுறைகள் ஒத்துவரவில்லை. ஆங்கில அரசோடு நேருக்கு நேர் போரிட்டு வெற்று பெற வேண்டும் என்று விரும்பினார். 1939-ம் ஆண்டு மே மாதம் பார்வர்டு பிளாக் என்ற கட்சியைத் தொடங்கினார்.

மரணம் குறித்து...

இந்தியாவில் அந்நிய ஆதிக்கம் நீங்க வேண்டும் என்பதே அவரது குறிக்கோள். இந்தியாவின் விடுதலை ஒன்றே தமது குறிக்கோள் என்று எடுத்துக்காட்டினார். 18.08.1945-ல் நேதாஜி சென்ற விமானம் விபத்துக்கு உள்ளாகியது. அந்த விபத்தில் அவர் மரணமடைந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. அவரது மரணம் குறித்த சர்ச்சைகள் இன்றளவும் நிலவி வருகின்றன. 

மாலை - மரியாதை...

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப் படத்திற்கு இன்று 23-ம் தேதி காலை 8.30 மணியளவில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத்தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து