முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று 3-வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்தை வீழ்த்துமா இந்தியா?

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

மவுன்ட் மவுங்கினி : மவுன்ட் மவுங்கினி நகரில் இன்று பகல் இரவாக நடைபெறும் 3-வது ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே முதல் இரு போட்டிகளை இந்திய அணி வென்று 2-0 என்ற கணக்கில் முன்னணியில் இருப்பதால், இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும். கடந்த 2014-ம் ஆண்டு அடைந்த 4-0 என்ற தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் அமையும். இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா திரும்பி இருப்பதால், இன்றைய ஆட்டத்தில் அவர் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் . அதேபோல, சுப்மான் கில்லுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
2-வது போட்டி நடந்த மவுன்ட் மவுங்கினி மைதானத்தில்தான் இந்த போட்டியும் நடத்தப்படுகிறது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணிவீரர்கள் ஜொலித்த அளவுக்கு நியூசிலாந்து வீரர்கள் விளையாடவில்லை. ஆனால், இன்று நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இல்லாவிட்டால் தொடரை இழக்க நேரிடும் என்பதால், நெருக்கடியான நிலையில் களம்காண்கிறார்கள்.

ஹர்திக் பாண்டியா இல்லாமல், நடுவரிசையில் இந்திய அணி தடுமாற்றமான நிலையில் இருந்து வருகிறது. இதனால், விஜய் சங்கர், கேதார் ஜாதவ் ஆகிய வீரர்களை மாறி, மாறி பயன்படுத்தி வந்தனர். இதில் விஜய் சங்கருக்கு இதுவரை ஒருபோட்டியில் மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், ஹர்திக் பாண்டியா அணிக்குத் திரும்பினால், நடுவரிசை பேட்டிங்கும் பலமடையும், பகுதிநேர பந்துவீச்சும் பலம் பெறும்.

இந்திய அணியைப் பொருத்தவரை பேட்டிங்கில் கடந்த 2 போட்டிகளிலும் வீரர்கள் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றனர். தொடக்க வீரர்களான ஷிகர் தவண் தொடர்ந்து இரு அரைசதங்களை அடித்து இழந்த பார்மை மீட்டுள்ளார். ரோஹித் சர்மா கடந்த போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டாலும், ரோஹித்தின் பேட்டிங் தொடர்ந்து வருகிறது.

கேப்டன் கோலி கடந்த இரு போட்டிகளிலும் , நடுவரிசை பேட்டிங்கை கருத்தில் கொண்டு நிதானத்துடன் விளையாடி வருகிறார். இன்னும் விராட் கோலியின் முழுமையான அதிரடி ஆட்டம் வெளிவரவில்லை. டோனியைப் பொருத்தவரை ஆஸ்திரேலியத் தொடரில் மூன்று போட்டிகளிலும் அசத்தலாக ஆடி தொடர் நாயகன் விருதை வென்றார். நியூசிலாந்து தொடரிலும் தோனியின் பேட்டிங் திறமை ஒளிர்ந்து வருகிறது. கடந்த போட்டியில் கடைசி 5 ஓவர்களில் அதிரடி பேட்டிங்கை கையாண்டு ஸ்கோரை 300 ரன்களுக்கு உயர்த்த முக்கியக் காரணமாக அமைந்தார்.

அம்பதி ராயுடு இதுவரை சொல்லிக்கொள்ளும் விதமாக ஸ்கோர் ஏதும் செய்யவில்லை. ஆதலால், இன்றைய போட்டியில் ராயுடுவுக்கு பதிலாக சுப்மான் கில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை கண்டு நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் நடுங்கி வருகிறார்கள். வழக்கமான லெக்ஸ்பின் பந்துவீச்சை சமாளித்து ஆடிய நிலையில், குல்தீப், சாஹல் வீசும் ரிஸ்ட் ஸ்பின்னை சமாளிக்க நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறுகிறார்கள்.

முதல் போட்டியில் சாஹலும், 2-வது போட்டியில் குல்தீப்பும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்துள்ளனர். குல்தீப், சாஹல் இருவரும் சேர்ந்து கடந்த இரு போட்டிகளில் 20 விக்கெட்டுகளில் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். ஆனால், இந்திய அணியில் சுழற்பந்துவீச்சு பலமாக இருக்கும் அளவுக்கு நியூசிலாந்திடம் சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் பயனளிக்கவில்லை. நியூசிலாந்து அணிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சிம்ம சொப்னமாகவே திகழ்ந்து வருகின்றனர்.

வேகப்பந்துவீச்சில் முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் தங்கள் பணியை சிறப்பாகச் செய்து வருகிறார்கள். கட்டுக்கோப்பாக பந்துவீசி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த தவறுவதில்லை. முக்கியமான கட்டங்களில் புவனேஷ்வர் குமார், ஷமியின் விக்கெட் வீழ்த்தும் திறமை அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்து வருகிறது. கடந்த 2 போட்டிகளில் கிடைத்த வெற்றியால் உத்வேகத்துடன் இந்திய அணி இருப்பதால், இன்றைய ஆட்டத்திலும் தனது வெற்றித்தடத்தை பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து