முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது போட்டியிலும் வெற்றி: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி

திங்கட்கிழமை, 28 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

மவுண்ட் மாங்கானு : நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 3-0 என தொடரைக் கைப்பற்றியது. 10 ஆண்டுகளுக்குப்பின், நியூசிலாந்து மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று இந்திய அணி சாதித்தது.

இந்தியா முன்னிலை...

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், மவுண்ட் மாங்கானுவில் நடந்த 2வது ஆட்டத்தில் 90 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

மாற்றங்கள்...

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி நேற்று 3வது ஒரு நாள் போட்டியில் களம் இறங்கியது.  இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் சான்ட்னர் சேர்க்கப்பட்டார்.  காலின் டி கிராண்ட்ஹோம் நீக்கப்பட்டார்.  இதேபோன்று இந்திய அணியில் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.  அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டு உள்ளார். விஜய் சங்கருக்கு பதிலாக ஹர்தீக் பாண்ட்யா அணியில் இணைந்தார்.

முகமது ஷமி....

முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 49 ஓவர்களில் 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக, ராஸ் டெய்லர் 93 ரன்கள் எடுத்தும், லாதம் 51 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ரோகித் - கோலி...

244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ஷிகர் தவான் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா உடன் இணைந்து நிதானமாக விளையாடினார். ரோகித் சர்மா தனது 39-வது ஒரு நாள் அரை சத்தையும், விராட் கோலி தனது 49-வது ஒரு நாள் அரை சத்தையும் அடித்தனர். ரோகித் 62 ரன்களிலும், கோலி 60 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர், களமிறங்கிய அம்பதி ராயுடு (40), தினேஷ் கார்த்திக் (38) ஜோடி நேர்த்தியாக விளையாடியதால், 43 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது.

10 ஆண்டுகளுக்கு...

முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என இந்திய அணி கைப்பற்றியது. 10 ஆண்டுகளுக்குப்பின், நியூசிலாந்து மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று இந்திய அணி சாதித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து