முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் இன்று முதல் பிரதமர் மோடி பிரசாரம்

வியாழக்கிழமை, 7 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி இன்று தொடங்கி 5 நாட்களுக்குள் 10 மாநிலங்களில் அதிரடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் மோடி, அமித்ஷா இருவரும் வியூகங்களை வகுத்து கடந்த மாத மே தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி விட்டனர். மத்திய மந்திரிகளும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி இன்று முதல் சூறாவளி பிரசாரத்தை தொடங்க உள்ளார். முதல் கட்டமாக 10 மாநிலங்களுக்கு செல்லும் வகையில் அவரது பிரசார பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கி 5 நாட்களுக்குள் பிரதமர் மோடி 10 மாநிலங்களிலும் அதிரடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நாளான இன்று (8-ந்தேதி) அவர் சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சென்று பிரசாரம் செய்ய உள்ளார். அம்மாநிலத்தில் ராய்கர் நகரில் நடக்கும் பிரமாண்ட கூட்டத்தில் மோடி பேச உள்ளார்.

பின்னர் அங்கிருந்து மேற்கு வங்காளம் செல்லும் அவர்.அங்கு ஜல்பைபுரி நகரில் நடக்கும் கூட்டத்தில் மோடி பேசுகிறார். அங்கு பிரசாரம் செய்துவிட்டு இரவில் அசாம் மாநிலத்தில் தங்குகிறார்.9-ந்தேதி (சனிக்கிழமை) காலை அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரம்மபுத்திரா நதி மீது புதிதாக கட்டப்பட இருக்கும் பாலத்துக்கும் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

இது தவிர எய்ம்ஸ் மருத்துவமனை, வடகிழக்கு மாநிலங்களை தேசிய திட்டத்துக்குள் இணைக்கும் புதிய சமையல் கியாஸ் இணைப்புத் திட்டத்துக்கும் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.அசாம் மாநில நிகழ்ச்சிகள் முடிந்ததும் பிரதமர் மோடி அருணாசல பிரதேசத்துக்கு செல்கிறார். அங்கு புதிய பசுமை திட்ட விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டி பேசுகிறார். இதைத் தொடர்ந்து திரிபுரா மாநிலத்துக்கு சென்று அங்கு பிரசாரம் செய்து முடிந்ததும் அன்றிரவே டெல்லி திரும்புகிறார்.

மூன்றாவது நாள் அதாவது 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். திருப்பூரில் நடக்கும் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். முன்னதாக தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.திருப்பூரில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் சென்னை மெட்ரோ ரெயிலின் முதல் திட்டப் பணியின் நிறைவு பகுதியான வண்ணாரப்பேட்டை வரையிலான ரெயில் போக்குவரத்தைத் தொடங்கி வைக்கிறார். திருப்பூர் கூட்டத்தில் பேசி முடித்த பிறகு பிரதமர் மோடி கர்நாடகம் சென்று அங்கு ஹப்பள்ளி நகரில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டுகிறார். அதன் பிறகு ஆந்திராவில் குண்டூரில் நடக்கும் கூட்டத்தில் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

ஆந்திரா சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு அன்றிரவே டெல்லி திரும்பும் மோடி அதற்கு அடுத்த நாள் அதாவது 11-ந்தேதி (திங்கட்கிழமை) உத்தரபிரதேச மாநிலத்துக்கு செல்கிறார். அங்கு மதுராவில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

11-ந்தேதி உத்தரபிரதேசத்தில் மட்டும் பிரசாரம் செய்துவிட்டு டெல்லி திரும்பும் பிரதமர் மோடி 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அரியானா மாநிலத்துக்கு செல்ல உள்ளார். அங்கு நடக்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

அந்த கூட்டம் முடிந்ததும் அவர் டெல்லி திரும்புகிறார்.பிப்ரவரி 3-வது வாரத்தில் இருந்து பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரம் மேலும் விறுவிறுப்பு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து