கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்

புதுடெல்லி : வங்கிகளுக்கு வழங்கிய கடன் மற்றும் வங்கிகளிடம் இருந்து பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நேற்று நிதிக்கொள்கை குழு மீண்டும் கூடியது. இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது. அதில் ரெப்போ வட்டி விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ரெப்போ 6.25 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இதையடுத்து வீட்டுக் கடன் மற்றும் பிற கடன்களுக்கான வட்டி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.