ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசின் அப்பீல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 7 பெப்ரவரி 2019      இந்தியா
sterlite close 2018 5 28

புதுடெல்லி : ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு  சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் காரணமாக ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில்  மனுத்தாக்கல் செய்தது. ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதேபோல் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனமும் மேல்முறையீடு செய்திருந்தது.

இவ்வழக்குகளை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நேற்று பிற்பகல் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேலும், அனைத்து தரப்பினரும் திங்கட்கிழமைக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து