முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சையத் முஸ்தாக் அலி டி-20 கிரிக்கெட்: தமிழக அணிக்கு அஸ்வின் கேப்டன்

வெள்ளிக்கிழமை, 8 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற 21-ம் தேதி முதல் மார்ச் 2-ம் தேதி வரை சூரத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த வீரர்களான முரளி விஜய், அபினவ் முகுந்த், பாபா அபரஜித் ஆகியோர் இடம் பெறவில்லை. இதுகுறித்து தேர்வாளர் ஒருவர் கூறும்போது, ‘‘முரளி விஜய், அபினவ் முகுந்த், அபரஜித் ஆகியோர் தங்களது திறமைகளை நிரூபித்த வீரர்கள். எனவே புதிய வீரர்களை களம் இறக்க விரும்புகிறோம். சுழற்பந்து வீச்சாளர் வருண் தோள்பட்டை காயம் காரணமாக விளையாடவில்லை என்றார்.

தமிழ்நாடு அணி: அஸ்வின் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர் (துணைக்கேப்டன்), ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ஹரி நிஷாந்த், ஷாருக்கான், பாபா இந்திரஜித், விவேக், நடராஜன், முகமது, கவுசிக், சாய்கிஷோர், முருகன் அஸ்வின், சதுர்வேத், விஜய் சங்கர், அதிசயராஜ் டேவிட்சன், அபிஷேக் தன்வார்.

________

ஒரே பந்தில் 17 ரன்கள் கொடுத்த ஆஸி. பவுலர்

ஐ.பி.எல் டி-20 லீக் கிரிக்கெட் தொடரைப் போல், ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் நடத்தப்பட்டு வருகிறது. இதில், நேற்று முன்தினம் நடந்த 52-வது லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியும், மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது.இதனை அடுத்து களமிறங்கிய மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 16 ரன்கள் வித்தியாசத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி வெற்றிபெற்றது.

போட்டியில் மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணியின் பேட்டிங்கின்போது, முதல் ஓவரை எதிரணியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரைலி மெரெடித் வீசினார். அவர் ஒரு பந்தை வீசுவதற்குள் 17 ரன்களை வாரிக்கொடுத்து அதிர்ச்சி அளித்தார். NB, Wide(4), NB(4), NB(4), 1 என ஒரு பந்தை வீசுவதற்குள் இவ்வளவு ரன்கள் கொடுத்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யமடைய வைத்துள்ளது. அவர் பந்து வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

__________

சர்ச்சைக்குரிய வகையில் அவுட்டான மிட்செல்!

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, ரோகித் சர்மா (50), ரிஷப் பண்ட் (40) உள்ளிட்டோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது.

போட்டியின் இடையே நியூசிலாந்து அணியின் பேட்டிங்கின்போது, 6-வது ஓவரை க்ருனல் பாண்டியா வீசினார். அந்த ஓவரின் கடைசிப் பந்தில் நியூசிலாந்து வீரர் மிட்செல் எல்.பி.டபுள்யூ ஆனதாக அம்பயர் அவுட் கொடுத்தார். ஆனால், நியூசிலாந்து தரப்பில் டி.ஆர்.எஸ் மேல்முறையீடு செய்யப்பட்டது. நிழல் படமாக தெரியும் ஹாட் ஸ்பாட்டில் பேட்டில் பந்து பட்டு பின்னர் பேடில் படுவது தெரிந்தது. உடனே, ஒலியை ஆய்வு செய்யும் ஸ்னிக்கோ மீட்டரில் பந்து பேட்டில் பட்டதற்கான சத்தம் பதிவாகவில்லை. இதனால், 3-வது அம்பயர் அவுட் என அறிவித்ததால், மிட்செல் ஒரு ரன்னில் பரிதாபமாக வெளியேறினார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

___________

மே.இ.தீவுகள் - இங்கிலாந்து மோதும் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் ஐலெட்டில் தொடங்குகிறது.

இந்த டெஸ்டிலும் வென்று இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் உள்ளது. கேப்டன் ஹோல்டருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டிருப்பது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. என்றாலும் பிராத்வைட், ஷாய் ஹோப், ஹெட்மையர், டவ்ரிச் பேட்டிங்கிலும், ரோச், கேப்ரியல், ஜோசப் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர். தொடரை இழந்துவிட்ட இங்கிலாந்து ஆறுதல் வெற்றிக்காக போராடும். தொடரை முழுமையாக இழக்காமல் இருக்க இங்கிலாந்து வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவது அவசியம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து