பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஸ்ரீதர், சித்திக் கமிட்டி அறிக்கை: அரசின் பரிசீலனையில் உள்ளது - பட்ஜெட் உரையில் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 8 பெப்ரவரி 2019      தமிழகம்
TN assembly 2018 10 12

சென்னை, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்கான ஸ்ரீதர், சித்திக் கமிட்டி அறிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளதாக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

ஓய்வூதியர்கள் நலன்...

கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் அரசுப் பணியாளர்களின் சம்பள உயர்வு மற்றும் படிகளை இந்த அரசு ஏற்கெனவே உயர்த்தி வழங்கியுள்ளதுடன், அகவிலைப் படியையும் காலமுறை தவறாமல் அவ்வப்போது உயர்த்தி வழங்கி வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர் டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையிலான குழுவும், ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்காக அமைக்கப்பட்ட எம்.ஏ.சித்திக்கின் தலைமையிலான குழுவும் தங்களின் அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளன. இவ்வறிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன.

மருத்துவக் காப்பீட்டு...

அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களுக்கான காப்பீட்டுத் தவணைத் தொகை செலுத்துவதற்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில் முறையே 253 கோடி ரூபாய் மற்றும் 299.28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் மற்றும் பிற ஓய்வுகாலப் பலன்களுக்கான இந்த வரவு செலவுத் திட்டத்தில், முறையே 55,399.75 கோடி ரூபாயும், 29,627.11 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து