மோடியின் நேர்மை மீது குற்றம் கூறி தன் முகத்தில் சேற்றைப் பூசிக்கொள்ளும் ராகுல் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆவேசம்

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2019      இந்தியா
Ravi Shankar Prasad 2019 01 17

புது டெல்லி : ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடியின் நேர்மையின் மீது குற்றம்கூறி ராகுல் காந்தி தன் முகத்தில் தானே சேற்றைப் பூசியுள்ளார் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து நேற்று ஊடகங்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டி அளித்தார். அப்போது, ரபேல் ஒப்பந்தம் கையொப்பம் ஆவதற்கு முன்பே தொழிலதிபர் அனில் அம்பானிக்கு தெரிந்து விட்டது. அனில் அம்பானியின் இடைத்தரகர் போல் செயல்படுகிறார் மோடி. ரகசிய காப்பு சட்டத்தை மீறிய பிரதமரை சிறையில் தள்ள வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்து, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்  டெல்லியில் நேற்று கூறியதாவது:

பிரதமர் மோடிக்கு எதிராக ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டு வெட்கமற்றது. பொறுப்பற்றதனத்தின் உச்சம். பிரதமர் மோடி ராஜ துரோகம் செய்து விட்டார் என்று ராகுல் கூறிய குற்றச்சாட்டு கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. எங்களுடைய கட்சிக்கும், தலைவர்களுக்கும், இந்திரா காந்தி குடும்பத்தில் வந்த பிரதமர்களுடன் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. பல மர்மமான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கூட கையொப்பமாகி இருக்கிறது. ஆனால், நாங்கள் ஒருபோதும் யாரையும் ராஜதுரோகம் என்று குற்றம்சாட்டியதில்லை.

பிரதமர் மோடி போன்ற நேர்மையான பிரதமர் மீது குற்றம்சாட்டி, ராகுல் தன் முகத்தில் தானே சேற்றை பூசிக்கொண்டுள்ளார். விரைவில் மக்களிடம் உண்மையை வெளிப்படுத்துவோம். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து