முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந் திருவிழா- 10ஆயிரம் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2019      திண்டுக்கல்
Image Unavailable

 நத்தம்,-    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இதன் முக்கிய திருவிழாவான மாசி பெருந்திருவிழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று அதிகாலை பக்தர்கள் உலுப்பகுடி அருகிலுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து அங்கிருந்து புனித தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்து சந்தன கருப்பு கோவிலில் சேர்ந்தனர். பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று அங்கு கூடியிருந்த பக்தர்களை கோவிலுக்கு அழைத்து வந்தனர். பின்னர் பக்தர்கள் தலையில் சுமந்த படி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க மீனாட்சிபுரம், பஸ்நிலையம், மார்க்கெட் வீதி, பெரிய கடை வீதி வழியாக வந்து மாரியம்மன் கோவிலை சென்றடைந்தனர். 
           பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. மாரியம்மன் வெள்ளிகவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  தொடர்ந்து பக்தர்கள் மஞ்சள் காப்பு கட்டினர். இதில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி 15 நாள் விரதம் தொடங்கினர். நேற்று இரவு சுமார் 9 மணிக்கு  அம்மன் குளத்திலிருந்து கம்பம் நகர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவிலில் ஸ்தாபிதம் செய்யபட்டது.இதை தொடர்ந்து வரும் 15, 19, 22ந் தேதிகளில் அம்மன் சர்வ அலங்காரத்தில் மயில், சிம்மம், அன்ன வாகனத்தில் எழுந்தருளி மின்ரதத்தில் ஊர்வலமாக நத்தத்தின் முக்கிய வீதிகளில் நகர்வலம் வந்து செல்லும். இந்த விழா நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து அக்னிசட்டி எடுத்தல்,மாவிளக்கு,கரும்புதொட்டில்,அங்கபிரதட்சணம், அலகுகுத்துதல்,அரண்மனைப் பொங்கல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துவார்கள். வரும் 26ந் தேதி செவ்வாய்கிழமை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கழுமரம் ஊன்றி பின்னர் ஏறுதல் நிகழ்ச்சியும்,தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்குவதும்   நடைபெறும். மறுநாள் காலையில் அம்பாள் மஞ்சள் நீராடுதலை தொடர்ந்து அன்றிரவு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அம்மன் குளத்திலிருந்து புறப்பட்டு நகர்வலமாக வந்து அம்மன் கோவிலை சென்றடையும். இத்துடன் திருவிழா நிறைவு பெறும்.
        விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், திருக்கோவில் பூசாரிகள் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். பொதுசுகாதாரப் பணி, குடிநீர் வசதிகளை நத்தம் பேரூராட்சி நிர்வாகமும், பாதுகாப்பு ஏற்பாடுகளை நத்தம் போலீசார் மேற்பட்ட போலீசார் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து