ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இம்மாத இறுதிக்குள் தலா ரூ.2000 வங்கி கணக்கில் செலுத்தப்படும் - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2019      தமிழகம்
cm speech assembly 2019 02 12

சென்னை : 60 லட்சம் ஏழை மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட உள்ள சிறப்பு நிதி உதவி ரூ.2 ஆயிரம் இந்த மாத இறுதிக்குள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டசபையில், நேற்று தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவி வழங்குவது குறித்து தி.மு.க. உறுப்பினர் பொன்முடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேசியதாவது.,

தேர்தலுக்காக அல்ல...

இன்றைக்கு பல்வேறு மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்களாக இருப்பது உங்களுக்கு நன்றாக தெரியும். உங்கள் மாவட்டத்தில்கூட பருவமழை சரியாக பெய்யவில்லை. ஆகவே, விவசாய தொழிலாளர்களுக்கு போதுமான வருமானம் கிடைக்கப்பெறவில்லை. அதேபோல, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் பல இடங்களிலே இன்றைக்குகூட போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காத காரணத்தினாலே, வறுமையிலே இருக்கின்ற காரணத்தினாலே, அதையெல்லாம் ஆராய்ந்து தான் இந்த திட்டத்தை அறிவித்திருக்கிறோமே தவிர, இது தேர்தலுக்காக அல்ல. இது அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது.

உழைப்பாளிகளுக்கு...

வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கின்ற அத்தனை பேருக்கும் கொடுக்கப்படுகின்றது. இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்று பார்த்து கொடுப்பதில்லை. நீங்கள் தவறான கருத்தை சொல்லியிருக்கின்றீர்கள். இது ஒட்டுமொத்தமாக தமிழகத்திலே இருக்கின்ற, உழைக்கின்ற உழைப்பாளிகளுக்கு, தொழிலாளிகளுக்கு கொடுக்கப்படுகின்ற நிதி என்பதை தங்கள் வாயிலாக உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, இதை அறிவித்தது தவறு என்று சொல்லுகிறாரா என்பதை மட்டும் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன் என்று முதல்வர் கேட்டார்.

வரவேற்கத்தக்கது...

இது குறித்து தி.மு.க. உறுப்பினர் பொன்முடி. இந்த நிதி உதவி வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அதை அறிவித்த முறை தான் சரியில்லை என்றார். இதைத்தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, இந்த திட்டம் வேண்டுமா ? வேண்டாமா ? என்று முதலில் சொல்லுங்கள் என்று கேட்டார். அமைச்சர் தங்கமணி, பேசுகையில் கடும் வறட்சி நிலவுவதால் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று கூறினார். இதைத்தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின் கூறுகையில், ஏழை எளிய மக்களுக்கு இரண்டாயிரம் வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது.

இந்த மாத இறுதிக்குள்...

இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 60 லட்சம் ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் தேர்தலுக்காக கொண்டு வரப்பட்டது அல்ல அனைவருக்கும் பொதுவானது, அனைத்துக்கட்சியை சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த தொகை இந்த மாத இறுதிக்குள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து