முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி, முக்கொம்பு மேலணையில் ரூ. 388 கோடியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய கதவணை அமைக்கும் பணி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

புதன்கிழமை, 20 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 387 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கதவணை அமைக்கும் பணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக நேற்று அடிக்கல் நாட்டினார்.

மேலும் பாதிக்காத வகையில்...

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், வாத்தலை கிராமம் மற்றும் ஸ்ரீரங்கம் வட்டம், எலமனூர் கிராமங்களின் இடையே முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 387 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கதவணை அமைக்கும் பணி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முக்கொம்பு மேலணையின் கொள்ளிடம் கதவணை மேலும் பாதிக்கப்படா வண்ணம் பாதுகாக்கும் பொருட்டு 38 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அணைவு பலகை, தெற்கு கொள்ளிடம் கதவணையில் கீழ்புறம் கூடுதல் கசிவில்லாச்சுவர் மற்றும் காப்பணை அமைத்து பலப்படுத்தும் பணி ஆகிய பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

பாசன வசதிகள் உறுதி...

இப்பணிகளை நிறைவேற்றுவதன் மூலம், திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள புள்ளம்பாடி, பெருவாளை மற்றும் அய்யன் வாய்க்கால்கள் வாயிலாக 56,953 ஏக்கர் நிலங்களின் பாசனவசதி உறுதி செய்யப்படுவதோடு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 12,01,507 ஏக்கர் பரப்பிலான காவேரி டெல்டா பாசன வசதிகள் உறுதி செய்யப்படும்.

போளூர் - கடலூர்...

மேலும், கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கப்பட்ட பேராம்பட்டு அணைக்கட்டு; திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், செய்யாற்றின் குறுக்கே 7 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு; கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கடிலம் ஆற்றின் குறுக்கே 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், குடகனாற்றின் குறுக்கே 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை திறந்து வைத்தார்.

திருப்பூர் - திருவள்ளூர்...

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், நல்லாற்றின் குறுக்கே 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை; திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், உப்பாற்றின் குறுக்கே 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை; திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 9 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை திறந்து வைத்தார்.

விருதுநகர் - சிதம்பரம்...

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், உப்போடையின் குறுக்கே 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை; கடலூர் மாவட்டம் கடலூர் மற்றும் பண்ருட்டி வட்டங்களில் 2 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து சீரமைக்கப்பட்ட வெள்ளப்பாக்கம் கால்வாய்; சிதம்பரம் வட்டத்தில் பாசிமுத்தான் ஓடை, தில்லையம்மன் ஓடை, ஓமக்குளம் வடிகால், கான்சாகிப் கால்வாய் மற்றும் முத்தையா பிள்ளை உபரி ஆகியவற்றில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வெள்ளத் தணிப்பு பணிகளை திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் - விழுப்புரம்...

சிதம்பரம் வட்டம், காட்டுமன்னார் கோயிலில் மணவாய்க்கால் மற்றும் பழைய கொள்ளிடத்தில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வெள்ள சேதங்களை சீரமைக்கும் பணிகள், காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளத்தினால் சேதமடைந்த அடையாறு மற்றும் வேகவதி ஆறுகளின் கரைப் பகுதிகளை 23 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து புதுப்பிக்கும் பணிகள், விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் வட்டம், கோலியனூர் கால்வாயில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகள், நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டம், நாட்டார் மங்களம் வடிகாலின் குறுக்கே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மறுகட்டமைப்பு செய்யப்பட்ட நீரொழுங்கி, சென்னை தரமணியில் பொதுப்பணித் துறை வளாகத்தில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் உதவியுடன் 1 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரைகீழ் நீர்த்தேக்கத் தொட்டிகள் என மொத்தம் 240 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நீர்வள ஆதாரத் துறையின் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி. அன்பழகன், வெல்லமண்டி என்.நடராஜன், சீ.வளர்மதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து