முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவசர நிலைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்

வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவில் அமலில் இருக்கும் அவசர நிலைக்கு எதிரான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், மெக்சிகோ எல்லை வழியாக அகதிகள் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைவதை தடுக்க அங்கு பிரமாண்ட தடுப்புச்சுவர் கட்ட அவர் முடிவு செய்தார். இந்த திட்டத்துக்காக 5.7 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கும்படி நாடாளுமன்றத்தை வலியுறுத்தினார். ஆனால் ஜனநாயக கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நிதி மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்தது. இதனால் பல்வேறு அரசுத்துறைகள் முடங்கின.

எனினும் எல்லைச்சுவர் கட்டும் முடிவில் விடாப்பிடியாக இருக்கும் அதிபர் டிரம்ப், அதற்கான நிதியை பெறுவதற்காக கடந்த 15-ம் தேதி நாட்டில் அவசர நிலையை பிறப்பித்தார். டிரம்பின் இந்த அதிரடி முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதனை தொடர்ந்து டிரம்ப் அறிவித்த அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினர் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடந்தது.

ஜனநாயக கட்சியில் மொத்தம் உள்ள 232 உறுப்பினர்களும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர். அதுமட்டுமின்றி குடியரசு கட்சியினர் 13 பேரும் இந்த தீர்மானத்தை ஆதரித்து ஓட்டுப்போட்டனர். இதன் மூலம் தீர்மானத்துக்கு ஆதரவாக மொத்தம் 245 ஓட்டுகள் கிடைத்தன.  அதே சமயம் தீர்மானத்துக்கு எதிராக 182 பேர் ஓட்டு போட்டனர். எனினும் தீர்மானத்துக்கு ஆதரவாக பெரும்பான்மையான ஓட்டுகள் கிடைத்ததால் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. இதையடுத்து இந்த தீர்மானம் செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அடுத்த வாரத்தில் இந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தப்படும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து