முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் வசம் சிக்கிய இந்திய விமானி அபிநந்தன் இன்று விடுதலையாகிறார் - நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக இம்ரான்கான் அறிவிப்பு

வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் வசம் சிக்கிய இந்திய விமானி அபிநந்தன் இன்று விடுதலையாகிறார். நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் விடுதலை செய்யப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். விமானி அபிநந்தனின் விடுதலை செய்தி அறிந்ததும் அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல, தமிழக மக்களும் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் துணை ராணுவ படை வீரர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதில் 40 வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானில் இயங்கி வரும் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றது.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களில் தாக்குதல் நடத்தினர். அப்போது பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதற்கிடையே பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் சென்ற இந்திய மிக் ரக விமானங்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

விமானத்தில் இருந்த தமிழக விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். விமானி அபிநந்தனை இந்தியாவுக்கு பத்திரமாக அழைத்து வர வேண்டும் என்று உலகம் முழுவதும் குரல்கள் எழுந்தன. இதையடுத்து இருநாட்டு எல்லையில் பதற்றம் நிறைந்த சூழ்நிலை காணப்பட்டது. அதனை தணிக்கும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் இறங்கின. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகள் இதுதொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டன. இதனிடையே விமானி அபிநந்தனை உடனடியாக பாகிஸ்தான் விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கூட்டுக்குழுவின் முன் பேசிய அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான், அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.

முன்னதாக சென்னையில் உள்ள அபிநந்தனின் வீட்டுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை, ஜி.கே. வாசன், தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, நடிகர் கமலஹாசன், தி.மு.க. சார்பில் டி.ஆர். பாலு உள்ளிட்ட தலைவர்கள் பலரும் நேரில் சென்று அபிநந்தனின் பெற்றோரிடம் கவலைப்பட வேண்டாம் என்று கூறி தேற்றினர். இந்த நிலையில் அவர் விடுவிக்கப்படுவார் என்றசெய்தி எட்டியதும் அவரது குடும்பத்தார் மட்டுமல்லாது, தமிழக மக்களும் மகிழ்ச்சி கடலில் மூழ்கினர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து