2-வது டி-20 கிரிக்கெட் போட்டி: 45 ரன்னில் மே.இ.தீவை சுருட்டி தொடரை வென்றது இங்கிலாந்து

சனிக்கிழமை, 9 மார்ச் 2019      விளையாட்டு
england won series 2019 03 09

பஸிடெ ரே : இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டி20 போட்டியில் 45 ரன்னில் சுருண்டு அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரை வென்றது.

182 ரன்கள்...

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர்களுக்குப் பிறகு டி20 தொடரில் இப்போது பங்கேற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி பஸிடெ ரேவில் நடந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன் எடுத்தது. அந்த அணியின் ஜோ ரூட் 40 பந்தில் 55 ரன்னும் ஆல் ரவுண்டர் சாம் பில்லிங்ஸ் 47 ரன்னில் 87 ரன்னும் விளாசினர்.

45 ரன்னுக்கு...

பின்னர் 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, விக்கெட்டுகளை மளமளவென இழந்து 11.5 ஓவர் களில் 45 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 137 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது குறைந்த ஸ்கோர் இது. இதற்கு முன் கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக, நெதர்லாந்து அணி, 10.3 ஓவர்களில் 39 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனதே மிகக் குறைந்த ஸ்கோராக இருக்கிறது.

ஜோர்டான் அபாரம்...

வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகப் பட்சமாக ஹெட்மயர் மற்றும் பிராத்வெயிட் மட்டும் தலா 10 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் யாரும் ஒற்றை இலக்க எண்ணைத் தாண்டவில்லை. இங்கிலாந்து தரப்பில் 2 ஓவர்களில் வீசி, 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஜோர்டான். டேவிட் வில்லே, அடில் ரஷித், ப்ளங்கட் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். சாம் பில்லிங்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து