சபரிமலை கோவில் விவகாரத்தை பிரசாரத்துக்கு பயன்படுத்தக்கூடாது: தேர்தல் கமிஷன் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 12 மார்ச் 2019      இந்தியா
election commission 2019 03 03

திருவனந்தபுரம், தேர்தல் பிரசாரத்தின் போது சபரிமலை அய்யப்பனின் பெயரால் மத பிரசாரம் செய்யக்கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த ஆளும் இடதுசாரி முன்னணி அரசு மும்முரமாக இருந்த நிலையில், அதை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.

இந்த விவகாரத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும், பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பெரும் மோதலும் வெடித்தது. சபரிமலை பிரச்சினையை முன்வைத்து ஒவ்வொரு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன. இந்த பிரச்சினை தற்போது அடங்கி இருக்கும் நிலையில், சபரிமலை விவகாரத்தை நாடாளுமன்ற தேர்தலில் பயன் படுத்த மாநில கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.  ஆனால் இதற்கு தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது. இது தொடர்பாக மாநில தேர்தல் அதிகாரி தீகா ராம் மீனா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை முன்வைத்து தேர்தல் பிரசாரத்தின் போது மத உணர்வுகளை தூண்டிவிடுவது அல்லது மதத்தின் பெயரால் ஓட்டு சேகரிப்பது போன்றவை தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும். குறிப்பாக சபரிமலை அய்யப்பனின் பெயரால் மத பிரசாரம் மேற்கொள்வது தெளிவான விதிமீறல் ஆகும். எனவே இத்தகைய விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தீகா ராம் மீனா கூறினார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து