முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

40 நட்சத்திர பிரமுகர்கள் பட்டியலை வழங்க அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் கெடு

செவ்வாய்க்கிழமை, 12 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : விமான பயண சலுகையை பெறுவதற்காக அரசியல் கட்சிகள், தங்களது கட்சியின் சார்பில் 40 நட்சத்திர பிரமுகர்கள் பட்டியலை வரும் 26ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூகேட்டுக் கொண்டுள்ளார்.

7 நாட்களுக்குள்...

இது குறித்து அவர் வெளியிட்டசெய்திக்குறிப்பு வருமாறு:-

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 77-ல் செய்யப்பட்ட வழிவகைகளின்படி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள் கட்சியின் வேட்பாளர் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது. இந்த சலுகையைப் பெற, பிரச்சாரம் செய்யும் தலைவர்களின் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரின் பெயர் பட்டியலையும், அங்கீகாரமற்ற கட்சிகள் 20 பேரின் பெயர் பட்டியலையும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். தேர்தல் செலவினத்தில் இருந்து விலக்கு பெறவேண்டிய இந்தத் தலைவர்கள் பட்டியலை, மேற்கண்ட சட்டப்பிரிவின் விளக்கம் 2-ன் உட்பிரிவு 1-ன்படி, தேர்தல் அறிவிக்கை வெளியிட்டதிலிருந்து 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க...

மக்களவைக்கான பொதுத்தேர்தல் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை இடைத்தேர்தல்களுக்கான அறிவிக்கை 19ம் தேதிக்குள் வெளியிடப்படவுள்ளது. செலவுத் தொகையிலிருந்து விலக்கு பெற விரும்பும் கட்சிகள் தங்கள் கட்சியின் சார்பில் பிரச்சாரம் செய்யும் தலைவர்களின் பெயர்ப் பட்டியலைத் தெரிவித்து இந்தியத் தேர்தல் ஆணையம் அல்லது தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பட்டியலில் உள்ளவர்களின் பயணச் செலவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். இதுதவிர மற்ற செலவினங்கள் அனைத்தும் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். அதே நேரம், வேட்பாளருக்கு வேறு கட்சியின் நட்சத்திரத் தலைவர் பிரசாரம் செய்தால், அதில் விலக்கு கோர இயலாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து