முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

18 சட்டசபை இடைதேர்தலிலும் அ.தி.மு.க. முழு வெற்றி பெறும் - மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் உறுதி

புதன்கிழமை, 13 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : 18 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சி மேலும் வலிமையோடு செயல்படும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

ஆலோசனைக் கூட்டம்

அ.தி.மு.க. கூட்டணிக்கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமைக்கழக அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சரும், தமிழக பா.ஜ.க மேலிட பார்வையாளருமான பியூஸ்கோயல் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில்.,

40 தொகுதிகளையும்...

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க, தே.மு.தி.க புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி த.மா.கா போன்ற கட்சிகள் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கூட்டணியில் இணைந்த கட்சிகள் அனைத்தும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல்நலத்துடனும் நீண்ட ஆரோக்கியத்துடனும் வாழவேண்டும். என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் இந்த கூட்டணியில் சேர்ந்திருப்பதால் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம்.

அஞ்சலியாக...

முதலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மறைந்த முதல்வர் எம்.ஜி..ஆர் பெயரை சூட்டியதற்காக பிரதமருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டை பொறுத்தவரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாதது வெற்றிடமாக அமைந்திருக்கிறது. நாற்பது தொகுதிகளிலும் இந்த கூட்டணி பெறும் வெற்றியே ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக அமையும். உலகளவில் மாபெரும் தலைவராக பிரதமர் மோடி உயர்ந்திருக்கிறார். உலகமே பாராட்டும் அரசாக அமைக்கும் தலைவர், வலிமையான முடிவெடுக்கும் தலைவர் தான் இன்றைக்கு தேசத்திற்கு தேவைப்படுகிறார். நாடு வலிமையான பாதுகாப்பான தலைமையை எதிர்நோக்கி இருக்கிறது. அத்தகைய தலைவராக பிரதமர் மோடி விளங்குகிறார்.

அனைத்து இடங்களில்...

இந்த கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறப்பான பங்கை ஆற்றும், 18 சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. முழுமையான வெற்றி பெறும். அ.தி.மு.க. ஆட்சி முழு வலிமையுடன் செயலாற்றவும் இந்த கூட்டணி உதவும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அனைத்து இடங்களில் வெற்றி பெறவும், மத்திய மாநில அரசுகளின் அனைத்து திட்டங்கள் கிடைக்கவும் உதவுவார்கள். வலிமையான பாரதம், வளர்ச்சி மிக்க பாரதத்தை உருவாக்க முழுமையாக செயலாற்றுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுசெயலாளர் ஏ.கே.மூர்த்தி, தே.மு.தி.க. துணை பொதுசெயலாளர் எல்.கே.சுதீஷ், த.மா.கா தலைவர் ஞானதேசிகன், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சித்தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து