மாண்டியா தொகுதியில் குமாரசாமி மகனை எதிர்த்து சுயேச்சையாக சுமலதா போட்டி

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      இந்தியா
actress sumalatha 2019 02 03

பெங்களூர் : மாண்டியா தொகுதியில் குமாரசாமி மகனை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுவது உறுதி என்று நடிகை சுமலதா அறிவித்துள்ளார். 

கன்னட நடிகரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான மறைந்த அம்பரீஷ் மனைவியான நடிகை சுமலதா பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட விரும்புகிறார்.

ஆனால் மாண்டியா தொகுதி காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முதல்வர் குமாரசாமி கட்சியான ஜே.டி.எஸ். கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

மாண்டியா தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிடுகிறார். இதனால் சுமலதாவிடம் வேறு தொகுதியில் போட்டியிடுமாறு சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தும் அதை சுமலதா ஏற்கவில்லை.

மாண்டியா தொகுதியில் சுமலதா தனது மகனுடன் சென்று தொகுதி முழுக்க ஆதரவு திரட்டினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் கண்டிப்பாக போட்டியிடுவேன். மாண்டியா மாவட்டத்தின் அனைத்து காங்கிரஸ் பிரமுகர்களும், அம்பரீஷ் ரசிகர்களும் எனக்கு ஆதரவு தந்து பக்கபலமாக இருந்து வருகிறார்கள்.எனவே நான் தேர்தல் களத்தில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. இந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவது உறுதி.இவ்வாறு அவர் கூறினார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து