சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மக்களவை தேர்தல் தேதியை மாற்ற முடியாது - ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் திட்டவட்டம் - கடமைக்காக தேர்தல் நடத்துவதா? ஐகோர்ட் கண்டனம்

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      தமிழகம்
highcourt-maduraibranch 2019 03 04

மதுரை : மதுரை பாராளுமன்ற தொகுதி தேர்தல் தள்ளி வைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் தேதியை தள்ளிவைக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதைதொடர்ந்து, கடமைக்காக தேர்தலை நடத்த வேண்டாம் என தேர்தல் ஆணையத்தை கடிந்து கொண்ட நீதிமன்றம், வாக்காளர்களை பற்றியும் சிந்தியுங்கள் என்று தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

திருவிழா தேரோட்டம்...

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது. அந்த நாளில் மதுரையில் பிரசித்திப் பெற்ற சித்திரை திருவிழா தேரோட்டம், மறுநாள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளதால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் பார்த்தசாரதி முறையீடு செய்தார்.  இதனை மனுவாக தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் தெரிவித்ததை தொடர்ந்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

பல இடையூறுகள்...

மனுதாரர் தரப்பு வக்கீல் ஆஜராகி, தமிழகத்தில் மிக முக்கியமான சித்திரை திருவிழாவையொட்டி நடைபெறும் தேரோட்டம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியவற்றை காண 15 லட்சம் பேர் வரை மதுரையில் கூடுவார்கள். அன்றைய தினம் தேர்தல் நடத்தப்பட்டால் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படும். வாக்குப் பதிவு கடுமையாக பாதிக்கப்படும். எனவே அன்றைய தினம் நடைபெறவுள்ள தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் என்றார்.

ஆணையம் மறுப்பு...

இதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், நாடு முழுவதும் பாதுகாப்பு காரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு ஆராய்ந்து திட்டமிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சித்திரை திருவிழாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைக்க இயலாது என்றார். 

நீதிபதி கேள்வி ?

அப்போது நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் குறுக்கிட்டு, மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது என்பதை தமிழக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு ஏன் கொண்டு செல்லவில்லை. இந்த விழாவின் காரணமாக மதுரை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் வாக்குகள் குறையாதா? 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற தேர்தல் ஆணையம் ஆர்வம் காட்டவில்லையா? என்றனர். மாற்றுத் தேதியில் தேர்தல் நடத்தலாமா? என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 14-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

தள்ளிவைக்க முடியாது....

இந்நிலையில், இந்த மனு மதுரை ஐகோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, தேர்தல் ஆணைய வழக்கறிஞர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை பாராளுமன்ற தேர்தலை தள்ளிவைக்க முடியாது. கோயிலை சுற்றியுள்ள 18 வாக்குச்சாவடிகளை பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்க வேண்டும். வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. துணை ராணுவ படையுடன் தேர்தல் நடத்த முடியும் என தெரிவித்தார்.

அக்கறை இல்லையா?

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வெறும் கடமைக்காக தேர்தலை நடத்த வேண்டாம். வாக்காளர்களை பற்றியும் சிந்திக்க வேண்டும். 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையத்துக்கு அக்கறை இல்லையா? இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் நேரில் ஆஜராக நேரிடும் என உத்தரவிட்டனர்.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து