முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல்: தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். ஆலோசனை - வேட்பாளர்கள் பற்றியும் நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர்

சனிக்கிழமை, 16 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் குறித்து அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

ஏப்ரல் 18-ம் தேதி...

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரம் 11-ல் தொடங்கி மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 18-ம் தேதி ஒரேநாளில் தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும், தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டசபை தொகுதிகளில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தமிழக அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.

தொகுதிகள் ஒதுக்கீடு...

தமிழகத்தில் அ.தி.மு.க. இத்தேர்தலில் மெகா கூட்டணியை அமைத்துள்ளது. அ.தி.மு.க தலைமையிலான இந்த மெகா கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க. தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளும், த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதி உள்ள 20 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.இதேபோல தி.மு.க.வும் தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இன்று வெளியாக...

இந்நிலையில் தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது பற்றி அ.தி.மு.க. மேலிடம் ஆலோசித்து வந்தது. இதனிடையே நேற்று தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்தை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் முதல்வர் எடப்பாடி சந்தித்து பேசினார். இதேபோல, பா.ம.க. நிறுவனர் ராமதாசும், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்தது தெரிந்ததே. இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மதுரை வந்தார். மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மோடியை மீண்டும் பிரதமர் ஆக்கும் நோக்கத்துடன் கூட்டணி கட்சி தலைவர்கள் செயல்படுவார்கள் என்று தெரிவித்தார். அவர் தமிழகம் வந்திருப்பதிலிருந்தே அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆலோசனை...

இந்நிலையில் அ.தி.மு.க. தலைமை கழகத்திற்கு நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் வந்தனர். அவர்களுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் உள்ளே சென்றதும் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது, அ.தி.மு.க. வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது குறித்து இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

எனவே அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல் இன்று வெளியாவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. ஏற்கனவே எம்.பி. தொகுதிகளுக்கான நேர்காணல் முடிவடைந்த நிலையில், இன்று சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.வினருக்கான நேர்காணல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து