முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைத்தேர்தலுக்கு காரணமான அ.தி.மு.க.வில் இருந்து விலகிய துரோகிகளை வீழ்த்த வேண்டும் - சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

புதன்கிழமை, 20 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சேலம் : அ.தி.மு.க. கூட்டணி மக்களின் நலன் சார்ந்த வெற்றிக் கூட்டணியாக திகழ்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே எண்ணம் கொண்ட ஆட்சி நடைபெற்றால்தான் தமிழகம் வளர்ச்சி பெறும் என்று தனது தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும், இடைத்தேர்தலுக்கு காரணமான அ.தி.மு.க.வில் இருந்து விலகிய துரோகிகளை வீழ்த்த வேண்டும் என்று சேலத்தில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி ஆவேசமாக தெரிவித்தார்.

செயல் வீரர்கள் கூட்டம்

தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க. நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள நிலையில், அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது பரப்புரையை தொடங்கியுள்ளனர். இதன் ஒருபகுதியாக, சேலம் தொகுதியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம், கொண்டலாம்பட்டியில் நடைபெற்றது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று, வேட்பாளர் சரவணனை அறிமுகம் செய்து வைத்தார். இதில் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி மற்றும் பா.ஜ.க, தே.மு.தி.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

மீண்டும் பிரதமராக...

கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேசியதாவது.,

10 மணிக்கு முன்பு நல்ல நேரம் முடியும் என்பதால், அதற்கு முன்பாகவே வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்தோம். மேலும், வலுவான கூட்டணியை அமைத்துள்ளதால், இந்தத் தேர்தலில் மகத்தான வெற்றியை பதிவு செய்வோம். அ.தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய கட்சிகள் ஒருங்கிணைந்த கூட்டணி. இது புதிதாக அமைத்த கூட்டணி அல்ல. எப்போதெல்லாம் கூட்டணி வைக்கிறோமோ அப்போது எல்லாம் கூட்டணி தர்மத்தை காப்பாற்றிய கூட்டணி என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். இந்தியா வல்லரசு நாடாக உருவாகின்ற வேளையில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. நல்ல ஆட்சி, நாட்டின் பாதுகாப்பு, மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமானால் வலிமையான தலைமையின் கீழ் ஆட்சி அமைய வேண்டும். எனவே மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்

மக்களின் நலன்...

கலைஞர் உடல்நலம் குன்றிய போது ஸ்டாலினை தலைவராக அறிவிக்கவில்லை. தந்தையே தன் மகன் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்றால் எப்படி மக்களுகு நம்பிக்கை ஏற்படும். மேலும் நிமிடத்தில் நிறம் மாறும் ஸ்டாலினுடன் கூட்டணி வைத்துள்ளவர்களுக்கு தேர்தலுக்கு பிறகு ஸ்டாலினின் குணம் புரிய வரும். திமுக கூட்டணி சுயநலத்திற்காகவும், பதவிக்காகவும்  அமைந்த கூட்டணி. அ.தி.மு.க. கூட்டணி மக்களின் நலன் சார்ந்த வெற்றிக் கூட்டணியாக திகழ்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே எண்ணம் கொண்ட ஆட்சி நடைபெற்றால்தான் தமிழகம் வளர்ச்சி பெறும். பாஐக-வுடன் கூட்டணி வைத்து பதவி சுகத்தை அனுபவித்த போது திமுக-விற்கு மதவாத கூட்டணியாக தெரியவில்லையா ?

கம்பெனியாக...

திமுக-வினர் எங்கு சென்றாலும் அதற்கேற்றாற் போல் பேசுபவர்கள். திமுக ஒரு கம்பெனியாக செயல்படும் கட்சி, 12 ஆண்டு காலம் மத்திய அரசோடு இணக்கமாக இருந்த போது தமிழகத்திற்கு திமுக என்ன செய்தது? அப்போது எந்த திட்டத்தையும் நிறைவேற்றாத திமுக-விற்கு ஏன் வாக்களிக்க வேண்டும். அப்படி வாக்களிப்பதால் எந்த பிரியோஜனமும் கிடைக்கப் போவதில்லை. அ.தி.மு.க. வில் இருந்து விலகிய துரோகிகளால்தான் இடைதேர்தல் வந்துள்ளது. அவர்களை வீழ்த்த வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக பேசினார்.

“இந்தியா வல்லரசு நாடாக உருவாகின்ற வேளையில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. நல்ல ஆட்சி, நாட்டின் பாதுகாப்பு, மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமானால் வலிமையான தலைமையின் கீழ் ஆட்சி அமைய வேண்டும். எனவே மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்”  - முதல்வர் எடப்பாடி

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து