முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்திரை திருவிழாவை காரணங்காட்டி மதுரை பாராளுமன்ற தொகுதி தேர்தலை தள்ளி வைக்க கோரிய வழக்கு தள்ளுபடி

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

மதுரை, மதுரை பாராளுமன்ற தொகுதி தேர்தலை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 24-ம் தேதி வரை நடக்கிறது. தேர்தல் ஆணையம் அறிவித்த பாராளுமன்ற தேர்தல் அட்டவணைப்படி வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 18-ம் தேதி மதுரை மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. இதே நாளில் தமிழகத்தில் மக்களவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது தென்மாவட்ட பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியது.

இந்த நிலையில் மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தலை ஒத்திவைக்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கறிஞர் பார்த்தசாரதி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் - சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். பின்னர் இது குறித்து ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் தேர்தல் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, மதுரை சித்திரை திருவிழாவுக்காக தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. மேலும் சித்திரை திருவிழா நடைபெறுவதால், வாக்குப்பதிவு செய்வதற்கான நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து தமிழக அரசின் முடிவை கேட்ட பின்னரே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதாகவும், கூடுதல் நேரம் மட்டுமே வழங்க முடியும் என்றும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று சென்னை ஐகோர்ட் வழங்கியது. தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள் தேர்தலை தள்ளி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதே போல் பெரிய வியாழன் உள்ளிட்ட பண்டிகையால் வழிபாடு பாதிக்கப்படும் என்றும், தேர்தல் நாளன்று கிறிஸ்தவ பள்ளிகளை தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதால் இடையூறு என்றும் கிறிஸ்தவ அமைப்புகள் தொடர்ந்திருந்த வழக்கையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து