முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 16 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் - சென்னையில் முதல்வர் எடப்பாடி பேச்சு

திங்கட்கிழமை, 25 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஒசி பிரியாணி, பஜ்ஜிக்காக ரகளையில் ஈடுபடும் தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 16 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வடசென்னை தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜூ, பெரம்பூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோரை ஆதரித்து சென்னையில் பல்வேறு இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். திறந்த ஜீப்பில் நின்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தி.மு.க.வினர் அராஜகம்...

தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பின் போது, தி.மு.கவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் செய்த அராஜகத்தை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். சட்டமன்றம் என்பது மிகுந்த கண்ணியத்திற்குரியது. அந்த அவையில் சபாநாயகர் இருக்கைக்கு என்று ஒரு மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால் அதை சீர்குலைக்கின்ற வகையில், சபாநாயகரை கிழே தள்ளியும், அவரது மேஜையை அப்புறப்படுத்தியும், முதலமைச்சர், அமைச்சர்கள் மேஜை மீது ஏறி நின்று அநாகரிகமான முறையில் விதிக்கு மாறாக நடந்துகொண்டார்கள். இந்த செயலினை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள். எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போதே, இதுபோன்ற அராஜக செயலில் ஈடுபடும் தி.மு.கவினர் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தால் எப்படி இருப்பார்கள் என்பதை மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

தி.மு.கவின் வாடிக்கை...

அ.தி.மு.க. 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என ஜெயலலிதா குறிப்பிட்டார், அம்மாவின் எண்ணங்களை நாங்கள் நிறைவேற்றிக் காட்டுவோ. பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வருவதற்கு காரணமாக இருந்த துரோகிகள், இந்தத் தேர்தலோடு காணமல் பேய்விடுவார்கள் என்பது தான் உண்மை. பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதற்காக ரூ.1000 அரசால் வழங்கப்பட்டது. அதை வழங்கக் கூடாது என்று தி.மு.கவினர் நீதிமன்றம் சென்றனர். ஆனால் ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதில் தடையில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்ததின் அடிப்படையில் அனைவருக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டது. ஏழை, எளியவருக்கு அரசால் வழங்கப்படுகிற நலத்திட்ட உதவிகளை தடுத்து நிறுத்துவதுதான் தி.மு.கவின் வாடிக்கை. இதுபோன்ற எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைத்திடஇரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யுமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

தேவையான குடிநீர்...

சென்னையைப் பொறுத்தவரையில் பேரிடர் காலங்களில் தங்குதடையின்றி மின்சாரம் கிடைத்திடவும் உரிய நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை வாழ்மக்களுக்கு தேவையான குடிநீர் முறையாக கிடைத்திடவும் அரசு தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பேரூராட்சி, நகராட்சியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சுமார் 16 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு, வீடுகள் இல்லாதோர் யாரும்  தமிழகத்தில் இல்லை என்ற ஒரு நிலையை நிச்சயமாக ஏற்படுத்தப்படும்.

போராட்டங்கள்...

மு.க. ஸ்டாலின் அ.தி.மு.க. பற்றி தப்புக்கணக்கு போட்டார். இந்த ஆட்சி 10 நாட்கள் நீடிக்குமா, ஒரு மாதம் தாக்குப்பிடிக்குமா என்று சொல்லி வந்தார். ஆனால் இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்று கடந்த 2 ஆண்டுகளில் எத்தனைப் போராட்டங்கள் நடைபெற்றது. இது வரை எந்த முதலமைச்சரும் சந்திக்காத போராட்டங்களை சந்தித்து, அவர்களின் பிரச்னைகளை தீர்த்து வைத்து, அதிலும் இந்த அரசு வெற்றி கண்டிருக்கிறது. இது போன்ற போராட்டங்களுக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டது தி.மு.க தான். தி.மு.கவினர் அராஜக செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். அதாவது, ஓசி புரோட்டா கேட்டும், ஓசி பிரியாணி, ஓசி பஜ்ஜி கேட்டும், செல்போன் கடைகளில் தகராறு, அழகு நிலையத்தில் அங்குள்ள பெண்களுடன் தகராறு போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா என்பதை வாக்காளர்களாகிய நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து