ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு

வியாழக்கிழமை, 4 ஏப்ரல் 2019      வர்த்தகம்
reserve bank of india 2019 04 04

புது டெல்லி : வங்கிகளுக்கு வழங்கிய கடன் மற்றும் வங்கிகளிடம் இருந்து பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற கூட்டங்களில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கூட்டத்தில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) மற்றும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) ஆகியவை 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. இதன்மூலம் ரெப்போ 6.25 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6 சதவீதமாகவும் குறைந்தது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு நேற்று மீண்டும் கூடியது. இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தனர். அப்போது குழுவில் உள்ள 4 உறுப்பினர்கள், வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்க வேண்டும் என்றும், 2 உறுப்பினர்கள் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்றும் தெரிவித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது. அதில் ரெப்போ வட்டி விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ரெப்போ 6 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 5.75 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இதையடுத்து வீட்டுக் கடன் மற்றும் பிற கடன்களுக்கான வட்டி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து