முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற முதல் கட்டத் தேர்தல்: 20 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு - ஆந்திரா உள்ளிட்ட 4 மாநில சட்டசபைக்கும் தேர்தல்

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பாராளுமன்ற முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 20 மாநிலங்களின் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. மேலும், ஆந்திரா உள்ளிட்ட 4 மாநில சட்டசபை தொகுதிகளிலும் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.

7 கட்ட தேர்தல்...

நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று தொடங்கி அடுத்த மாதம் 19-ம் தேதி வரை 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆயுள் காலம் முடிகிற ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தமட்டில், 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகள் இன்று முதல் கட்ட தேர்தலை சந்திக்கின்றன.

அந்த மாநிலங்களிலும் அவற்றின் தொகுதிகள் எண்ணிக்கையும் வருமாறு:-

ஆந்திரா-25, அருணாசலபிரதேசம்-2, அசாம்-5, பீகார்-4, சத்தீஷ்கார்-1, காஷ்மீர்-2, மராட்டியம்-7, மணிப்பூர்-1, மேகாலயா-2, மிசோரம்-1, நாகலாந்து-1, ஒடிசா-4, சிக்கிம்-1, தெலுங்கானா-17, திரிபுரா-1, உத்தரபிரதேசம்-8, உத்தரகாண்ட்-5, மேற்கு வங்காளம்-2, லட்சத்தீவுகள்-1, அந்தமான் நிகோபார் தீவுகள்-1.

நிதின் கட்காரி...

பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட தேர்தலை இன்று சந்திக்கிற முக்கிய தலைவர்களில் உத்தரபிரதேசத்தில் இருந்து போட்டியிடும் மத்திய அமைச்சர்கள் வி.கே. சிங் (காசியாபாத்), மகேஷ் சர்மா (நொய்டா), சத்யபால் சிங் (பாக்பத்), ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சி தலைவர் அஜித் சிங் (முசாப்பர்நகர்) ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர். மராட்டிய மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற தலைவர்களில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி (நாக்பூர்), முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சுஷில்குமார் ஷிண்டே (சோலாப்பூர்) உள்ளிட்டவர்கள் அடங்குவர்.

3 மாநிலங்களில்...

ஆந்திரா, அருணாசல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநிலங்கள் சட்டசபை தேர்தலை சந்தித்தாலும், இவற்றில் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் அனைத்து தொகுதிகளிலும் ஒரே நாளில் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஒடிசாவை பொறுத்தவரையில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற 4 பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில் மட்டும் இன்று முதல் கட்ட தேர்தல் நடக்கிறது.

கடும் போட்டி...

சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்குதேசம் கட்சியின் ஆட்சி நடக்கிற ஆந்திராவில், ஆட்சியை தக்க வைக்க அவர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதே நேரத்தில் ஆட்சியை அவரிடம் இருந்து பறிப்பதற்கு ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனாவும் முயற்சிக்கின்றனர். காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய இரு கட்சிகளும் பெயரளவில்தான் களத்தில் உள்ளன.

காங். முயற்சி...

அருணாசலபிரதேசத்தில் முதல் அமைச்சர் பெமா காண்டு தலைமையில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை மசோதா, பாரதீய ஜனதாவுக்கு எதிராக சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதைப் பயன்படுத்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது.

நவீன் பட்நாயக்...

ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் கட்சி ஆட்சியை தக்க வைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சிக்கிமில் முதல்-மந்திரி பவன்குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எப்.) ஆட்சி நடக்கிறது. அங்கு சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சி ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக முயற்சிக்கிறது.

பிரச்சாரம் ஓய்ந்தது...

91 பாராளுமன்ற தொகுதிகளிலும், 4 சட்டசபை தேர்தல்களிலும் அனல்பறக்கும் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை ஓய்ந்தது. பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா கட்சித்தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் பிரசாரம் செய்தனர். வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர்.

பலத்த பாதுகாப்பு...

இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை இடைவெளியின்றி ஓட்டுப்பதிவு நடக்கிறது. வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்கு எந்திரங்களையும், ஒப்புகைச்சீட்டு வழங்கும் ‘விவிபாட்’ எந்திரங்களையும் எடுத்துச்செல்லும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் நடந்து விடாதபடிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாராளுமன்ற தேர்தல்

1) ஆந்திரா-25, 2) அருணாசலபிரதேசம்-2, 3) அசாம்-5, 4) பீகார்-4, 5) சத்தீஷ்கார்-1, 6) காஷ்மீர்-2, 7) மராட்டியம்-7, 8) மணிப்பூர்-1, 9) மேகாலயா-2, 10) மிசோரம்-1, 11) நாகலாந்து-1, 12) ஒடிசா-4, 13) சிக்கிம்-1, 14) தெலுங்கானா-17, 15) திரிபுரா-1, 16) உத்தரபிரதேசம்-8, 17)  உத்தரகாண்ட்-5, 18) மேற்கு வங்காளம்-2, 19) லட்சத்தீவுகள்-1, 20) அந்தமான் நிகோபார் தீவுகள்-1.

சட்டசபை தேர்தல்

1) ஆந்திரா, 2) அருணாசல பிரதேசம், 3) சிக்கிம், 4) ஒடிஷா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து