முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் ஆவணங்கள் மீது விசாரணை நடத்தப்படும்: மத்திய அரசின் கோரிக்கை நிராகரித்து சுப்ரீம் கோர்ட்

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ரபேல் வழக்கில் மத்திய அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு ஆவணங்கள் மீதான விசாரணை நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
மறுசீராய்வு மனு

ரபேல் விமானங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் அதை விசாரிக்க வேண்டுமென்றும் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் கடந்த டிசம்பர் ‌மாதம், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. அதில் ரபேல் விமான ஒப்பந்தத்தில் எந்தத் தவறும், முறைகேடுகளும் நடக்கவில்லை என சுப்ரீம் கோர்ட் தன் தீர்ப்பில் கூறியிருந்தது. இதனையடுத்து மத்திய அரசு ரபேல் வழக்கில் பல தகவல்களை மறைத்துள்ளதால், தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் எனக் கோரும் மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட் விசாரணையை நடத்தியது. சுப்ரீம் கோர்ட்  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ் கே கவுல், கே எம் ஜோசப் ஆகியோர் ‌அமர்வு இதனை விசாரித்தது.

கோரிக்கை நிராகரிப்பு

இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் அனைத்து நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதில் ரபேல் ஆவணங்கள் மீதான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக சட்டவிரோதமாக பெறப்பட்ட ஆவணங்கள் மீது விசாரணை நடத்தக் கூடாது என மத்திய அரசு வைத்த கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்து உள்ளனர். மேலும் ஒரு செய்தித் தாளில் வெளியான ஆவணங்களும் விசாரணையின் போது எடுத்து கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்க கூடாது

முன்னதாக வழக்கின் விசாரணையின்போது ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த பாதுகாப்புத்துறையின் ஆவணங்களின் நகல்களை மனுதாரர்கள் தாக்கல் செய்தனர். பின்னர் வாதாடிய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால், திருடு போன ரபேல் தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில்தான் ஒரு பத்திரிகை தகவல்களை வெளியிட்டிருக்கிறது. அந்த ஆவணங்களை ஏற்கக் கூடாது என்றும் வேணுகோபால் தெரிவித்தார். மேலும் பாதுகாப்புத் துறையின் ‌ரகசிய ஆவணங்களை நகலெடுத்திருப்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து